சோல்: உலக அளவில் பிறப்பு விகிதம் ஆகக்குறைவாக இருக்கும் நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் குழந்தைப் பொருள்களுக்கான சில்லறை விற்பனை சூடுபிடித்துள்ளது.
அந்நாட்டில் ஒரே குழந்தை உள்ள பெற்றோர் சிலர் அப்பிள்ளையைப் பொக்கிஷமாக வளர்ப்பதற்காக அதிக விலை மதிப்புள்ள பொருள்களை வாங்கித் தந்து அழகு பார்க்கின்றனர். எனவே அங்கு குழந்தைப் பொருள் விற்பனை சூடுபிடித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் அந்நாட்டில் குடும்பங்கள், தங்களின் குழந்தைகளை விஐபிஸ் (VIBs), அதாவது மிக முக்கியமாக குழந்தைகளாகப் பார்க்கும் போக்கு உருவெடுத்துள்ளது. விலை உயர்ந்த குழந்தைத் தள்ளுவண்டிகள், சிறப்பு வடிவமைப்பு ஆடைகள், அதிக விலை கொண்ட விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றை குடும்பத்தார் வாங்கிக் கொடுத்து ‘குளிர்வித்து’ விடுகின்றனர்.
இணையத்தில் குழந்தைப் பொருள் விற்பனை புதிய உச்சம்
சென்ற ஆண்டு தென்கொரியாவில் இணையம்வழி குழந்தைப் பொருள்களை வாங்குவதற்காக வரலாறு காணாத அளவில் 5.48 டிரில்லியன் வோன் (5.18 பில்லியன் வெள்ளி) செலவு செய்யப்பட்டது. அத்தொகை, 2017ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் 67 விழுக்காடு அதிகம் என்று அந்நாட்டின் தரவு, புள்ளிவிவர அமைச்சின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தென்கொரியாவின் முன்னணி சில்லறை வர்த்தகமான ஹியுண்டாயின் கடைகளில் இவ்வாண்டு முற்பாதியில் குழந்தை ஆடைகளின் விற்பனை 50 விழுக்காடு அதிகரித்தது. அதன் போட்டி நிறுவனமான ஷின்சகேயில் அந்த வளர்ச்சி விகிதம் 20 விழுக்காடாகப் பதிவானது.
அதேபோல் லோட்ட (Lotte) சில்லறை விற்பனைக் கடைகளில் உயர்தர குழந்தைப் பொருள்களின் விற்பனை இருமடங்குக்கும் மேல் அதிகரித்தது. உயர்தர குழந்தைத் தள்ளுவண்டிகள் போன்ற பொருள்கள் அவற்றில் அடங்கும்.
குறைவான பிறப்பு விகிதத்துடன் தொடர்புடைய போக்கு
இந்தப் போக்கு, பிறப்பு விகிதம் தொடர்பான வாழ்க்கை அணுகுமுறைகளில் அதிகம் காணப்பட்டுவரும் ஒன்றாகும். குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாகச் செலவு செய்யும்.
இந்நிலையில், தென்கொரியாவின் பிறப்பு விகிதம் சற்று மேம்பட்டுள்ளது. சென்ற ஆண்டு அந்நாட்டில் 254,300 குழந்தைகள் பிறந்தன. இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டு பிறந்த குழந்தைகளைவிட 6.7 விழுக்காடு அதிகமாகும்.
அதேபோல், ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் விகிதம் 0.8க்குக் கூடியது. அவ்விகிதம் 2023ல் வரலாறு காணாத அளவில் குறைவாக 0.72ஆகப் பதிவானது.
எனினும், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கணிப்புகளின்படி நாட்டின் மக்கள்தொகை சீராக இருக்க அந்த விகிதம் 2.1ஆக இருக்கவேண்டும். அந்த வகையில், தென்கொரியா பெரிதும் பின்தங்கியுள்ளது.
