நோம் பென்: தாய்லாந்தில் தொடங்கியுள்ள 33வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கம்போடியா, அதன் விளையாட்டாளர்களை மீட்டுக்கொண்டுள்ளது.
இரு நாட்டு எல்லையோரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கம்போடியா புதன்கிழமை (டிசம்பர் 10) அதனை அறிவித்தது.
விளையாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரையும் உடனடியாகத் தாயகம் திரும்புமாறு கம்போடியா உத்தரவிட்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கம்போடிய தேசிய ஒலிம்பிக் குழு தெரிவித்தது. விளையாட்டாளர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்களைத் திரும்பச் சொல்லியிருப்பதாகக் குழு குறிப்பிட்டது.
137 பேர் கொண்ட கம்போடிய விளையாட்டுக் குழு, 12 போட்டிகளில் பங்கெடுக்கத் திட்டமிட்டிருந்தது.
விளையாட்டாளர்களை மீட்டுக்கொண்டது குறித்துக் கம்போடிய தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைமைச் செயலாளர் வாத் சாம்ரன், தென்கிழக்காசிய விளையாட்டுச் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாயாபாக் சிரிவாட்டுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
விளையாட்டாளர்கள் வெளியேறுவதற்கான பயண விவரங்கள் குறித்துச் சம்மேளனத்துடன் கலந்துபேசப்போவதாகச் சொன்னது கம்போடியத் தரப்பு.
போட்டிகளை ஏற்றுநடத்தும் தாய்லாந்து வெளிப்படுத்திய விருந்தோம்பல், நட்புணர்வு, விளையாட்டு மனப்பான்மை ஆகியவற்றுக்குக் கம்போடியா நன்றி தெரிவித்துக்கொண்டது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியில் கம்போடியா பங்குபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் காற்பந்து உள்ளிட்ட எட்டு விளையாட்டுகளிலிருந்து வெளியேறுவதாகச் சென்ற மாதம் கம்போடியா கூறியிருந்தது.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், இம்மாதம் 20ஆம் தேதிவரை நடைபெறவிருக்கின்றன.

