தென்கிழக்காசியாவில் சட்டவிரோத இணையவழிச் சூதாட்டம் வேகமாக வளர்ந்துவரும் குற்றச்செயலாக மாறியுள்ளது என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் ஜூலை 21ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
அந்தச் சட்டவிரோதத் தொழிலைக் கட்டுப்படுத்தாமல் விட்டால் பாதிக்கப்பட்ட இளையர்களைக் அது கடனில் தள்ளிவிடும் அபாயம் உள்ளது. அத்துடன், சட்டவிரோதக் கடன் வசூல், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட செயல்களில் இளையர்களை ஈடுபடுத்தவும் வழிவகுக்கும் என்று அந்த அலுவலகம் எச்சரித்திருந்தது.
‘ஒருங்கிணைந்த குற்றச் சூழலமைப்பு: தென்கிழக்கு ஆசியாவிற்கான நாடுகடந்த, கட்டமைக்கப்பட்ட குற்ற அச்சுறுத்தல் மதிப்பீடு’ என்ற தலைப்பில் அது தனது அறிக்கையை வெளியிட்டிருந்தது.
மின்னிலக்க உள்கட்டமைப்பு, இணையவழிப் பணம் செலுத்தும் தொழில்நுட்பம் போன்றவற்றுடன் சேர்ந்து இணையவழிச் சூதாட்டமும் வளர்ந்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்காசிய நாடுகள் சூதாட்டக்கூடங்களை மூடுவதிலும் மோசடிகளை ஒழிப்பதிலும் கவனம் செலுத்தும் அளவுக்கு சட்டவிரோத இணையவழிச் சூதாட்டத்தின்மீது கவனம் செலுத்தப்படுவது இல்லை என்று அந்த அலுவலகம் கண்டறிந்துள்ளது.
“கட்டமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் இளையர்களையே குறிவைத்துச் செயல்படுகின்றன.
“சமூக ஊடகங்கள் வாயிலாக இளையர்களை சட்டவிரோச் சூதாட்டத் தளங்களுக்குள் அத்தகைய கும்பல்கள் இழுத்துவிடுகின்றன. இன்ஸ்டகிராம், டிக்டாக், டெலிகிராம், லைன் போன்ற தகவல் பரிமாற்றச் செயலிகள் வாயிலாகவும் இளையர்களை அவை தங்கள் வலைக்குள் சிக்கவைக்கின்றன.
“அத்துடன், விளையாட்டாளர்களை ஈர்ப்பதற்கும் இணையவழிச் சூதாட்டத்தை இயல்பாக்குவதற்கும் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்போரை, குறிப்பாக பெண்களை அந்தக் கும்பல்கள் கவர்ந்திழுக்கின்றன.
“பாரம்பரிய விளம்பரங்களைக் காட்டிலும் அவர்களின் சூதாட்ட விளம்பரங்களை இளம் பார்வையாளர்களுக்கு மிகவும் நம்பத்தகுந்தவையாக ஆக்குகின்றன,” என்று அந்த அலுவலகம் மேலும் கூறியது.
குறிப்பாக, வேலையில்லாத இளையர்களும் குறைவான ஊதியம் ஈட்டுவோரும் அதிகமாக உள்ள மியன்மார் போன்ற நாடுகளில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையுடன் சட்டவிரோத இணையவழிச் சூதாட்டத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.
15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட மியன்மார் குடிமக்களில் நால்வரில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பதாக 2025 அக்டோபரில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் வளர்ச்சித் திட்ட அறிக்கை குறிப்பிட்டது.
மேலும், வேலையில் இருக்கும் இளையர்கள் மாதந்தோறும் சராசரியாக 459,695 மியன்மார் கியட் (S$280) சம்பளம் பெறுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

