தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்பெயின் வெள்ளம்: மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
fe974666-78c6-4f7a-8125-eed1c7f640f8
உதவி பெறுவதற்காக வெலன்சியா மாநிலத்தின் பைபோர்த்தா நகரில் வரிசையில் காத்திருக்கும் மக்கள். - படம்: இபிஏ
multi-img1 of 2

மட்ரிட்: ஸ்பெயினில் பல்லாண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான வெள்ளத்தில் குறைந்தது 158 பேர் உயிரிழந்தனர்.

உயிர் பிழைத்தோரைத் தேட மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை (அக்டோபர் 31) 1,200க்கும் அதிகமான ஊழியர்கள் ஆளில்லா வானூர்திகளின் உதவியோடு மீட்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

“இப்போதைக்கு முடிந்த அளவுக்கு உயிர்களைக் காப்பாற்றுவதே மிக முக்கியமானது,” என்று பிரதமர் பெட்ரோ சன்செஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரிடம் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) ஏற்பட்ட வெள்ளத்தில், ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட சில நகரங்களில், சேற்றிலிருந்தும் இடிபாடுகளிலிருந்தும் சடலங்களை மீட்கும் பணி மக்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

வெலன்சியாவில் குறைந்தது 155 மரணங்கள் பதிவாயின. ‘பைபோர்த்தா’ நகரில், இதுவரை குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சாலைகளிலிருந்து ஈமச் சடங்கு வேன்களில் சடலங்கள் கொண்டுசெல்லப்படுவதை பிபிசி செய்தி நிறுவனம் கண்டது. அருகிலுள்ள சாலைகளில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட கார்கள் ஒன்று மற்றொன்றின்மீது இருப்பதையும் காணமுடிந்தது.

நெடுஞ்சாலைகளும் சாலைகளும் ஆறுகளாக மாறிவிட்டதால், வாகனமோட்டிகள் மரங்கள் அல்லது பாலங்கள்மீது ஏறி உயிர் தப்பினர்.

காணாமல்போனவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், பலரைக் காணவில்லை என்று அவர்கள் கூறினர்.

இந்நிலையில், ஸ்பெயின் தேசிய அளவில் அதிகாரபூர்வமாக மூன்று நாள் துக்கம் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசாங்கக் கட்டடங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. மௌன அஞ்சலிகளும் செலுத்தப்பட்டன.

இத்தகைய வெள்ளமும் மழையும் இதுவரை நிகழ்ந்ததில்லை என அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
ஸ்பெயின்வெள்ளம்உயிரிழப்பு