மட்ரிட்: ஸ்பெயினில் கடந்த மாதம் நேர்ந்த மோசமான ரயில் விபத்தில் மாண்டோரில் நால்வர் அமெரிக்கக் குடிமக்கள் என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மேலும், கனடா, ஜப்பான், அர்ஜெண்டினா, மெக்சிக்கோ, துனிசியா, செக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் மாண்டோர் பட்டியலில் உள்ளனர். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தலா ஒரு பயணி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்டோபர் 28ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான ரயில் விபத்தில் உயிரிழந்த 69 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
காவல்துறை அதிகாரிகளாலும் தடயவியல் நிபுணர்களாலும் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பு மாண்டோரின் உடல்களை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
அந்த அமைப்பு, இதற்குமுன் பிரெஞ்சு நாட்டவர் ஒருவர், போர்ச்சுகல் நாட்டவர் ஒருவருடன் ஸ்பெயினைச் சேர்ந்த 54 பேர் விபத்தில் இறந்ததை உறுதிசெய்தது.
மூவரைத் தவிர மாண்டோர் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காணாமற்போன மூவர் குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர். அவர்களில் இருவர் ஆஸ்திரேலியர்கள். ஒருவர் ஜப்பானியர்.
ஸ்பெயினில் இவ்வாண்டு ஏற்பட்ட கோரமான விபத்துகளில் அக்டோபரில் நேர்ந்தது இரண்டாவது விபத்து. அதையடுத்து நாட்டின் ரயில் கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இதற்குமுன் ஜனவரி மாதம் ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள அண்டலூசியாவில் ஏற்பட்ட மோசமான ரயில் விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்.
