மட்ரிட்: காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஐரோப்பிய, அரபு நாடுகளை ஸ்பெயின் ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒன்றுகூட்டியது.
அதில் பேசிய ஸ்பானிய வெளியுறவு அமைச்சர் காஸா போரை இஸ்ரேல் நிறுத்த நெருக்குதல் அளிக்கும் விதமாக அதற்கு தடைகள் விதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஸ்பெயின் கூட்டிய இந்த மாநாட்டில் இஸ்ரேலின் நீண்டநாள் நட்பு நாடுகளும் அதற்கு நெருக்குதல் கொடுக்கும் விதமாக மாநாட்டில் கலந்துகொண்டன. ஹமாஸ் இயக்கம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் தற்பொழுது அதை காஸாவில் விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஸாவில் கடந்த இரண்டு மாதங்களாக உதவிப் பொருட்கள் செல்ல இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனால் அங்கு உணவு, குடிநீர், எரிபொருள், மருந்துப் பொருள்கள் எதுவும் செல்ல முடியாத நிலை உருவாகி பசி, பட்டினியால் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் அங்கு அனுமதித்துள்ள உதவிப் பொருள்கள் அங்குள்ள மக்களின் தேவைக்கு மிகவும் குறைவாக உள்ளதாக உதவி அமைப்புகள் கூறுகின்றன.
மட்ரிட் நகரில் நடக்கும் பேச்சுவார்த்தை இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற, அர்த்தமற்ற போரை நிறுத்தும் நோக்கம் கொண்டது என்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்பானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
காஸாவுக்குள் மனிதாபிமான உ தவி மிகப்பெரிய அளவில், நிபந்தனைகளின்றி, தாராளமாக, இஸ்ரேலின் கட்டுப்பாடின்றி செல்ல வேண்டும் என்று ஸ்பானிய அமைச்சர் விளக்கினார்.
“இதுபோன்ற நேரங்களில் அமைதியுடன் இருப்பது அந்தப் பேரழிவில் பங்குகொள்வதற்கு சமம்,” என்றும் ஸ்பானிய வெளியுறவு அமைச்சர் திரு அல்பரெஸ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த மாநாட்டில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாட்டுப் பிரதிநிதிகளுடன் எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா, துருக்கி, மெரோக்கோ, அரபு லீக் போன்றவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.