பட்டாசு ஆலை விபத்தை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும்: சீனா

பட்டாசு ஆலை விபத்தை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும்: சீனா

2 mins read
a2bbb0ee-47f9-4138-91d3-b295f6b4d797
லியூயாங் நகரில் ஏற்பட்ட கடுமையான பட்டாசு ஆலை விபத்தில் 26 பேர் மாண்டனர். - படம்: சின்ஹுவா

சாங்‌‌‌ஷா: சீனாவில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு மூத்த சீன அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

ஹூனான் மாநிலத்தின் லியூயாங் நகரில் மே 4ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் மாண்டனர், 61 பேர் காயமுற்றனர்.

பட்டாசு ஆலை விபத்தில் கட்டடங்கள் தரைமட்டமானதுடன் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குக் காரணமானோர் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

விபத்தை அடுத்து நகரில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளின் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு பாதுகாப்புச் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டன.

மூத்த அதிகாரிகளை வழிநடத்திய சீனாவின் துணைப் பிரதமர் சாங் குவோசிங், அவசர மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டதாக ஆளும் கம்யூனிசக் கட்சியின் சைனா டெய்லி நாளேடு குறிப்பிட்டது.

பட்டாசு ஆலை விபத்து குறித்து விசாரிக்க மாநில சட்டமன்றம் அல்லது அமைச்சரவை, விசாரணைக் குழு ஒன்றை அமைக்கும் என்றும் நாளேடு சொன்னது.

கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் வாழும் லியூயாங் நகர், பட்டாசு உற்பத்திக்கான தலைநகராகக் கருதப்படுகிறது. விபத்து ஏற்பட்ட ஆலைக்கு அருகில் உள்ள குடியிருப்புக் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்தன.

ஹுவா‌ஷெங் பட்டாசு உற்பத்தி ஆலையில் பிற்பகல் வாக்கில் ஏற்பட்ட வெடிப்பால் அருகிலிருந்த கிராமங்களில் உள்ள கட்டடங்களின் கதவுகளும் சன்னல்களும் சிதறின.

தீயணைப்பாளர்கள், மீட்புப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என 1,500க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு, மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விபத்து நிகழ்ந்த வட்டாரத்தில் அபாயங்களைக் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்த 18 ஆளில்லா வானூர்திகளும் இயந்திர மனிதக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.

கடுமையான தீ விபத்து காரணமாகப் பட்டாசு ஆலை தரைமட்டமானது.
கடுமையான தீ விபத்து காரணமாகப் பட்டாசு ஆலை தரைமட்டமானது. - படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்