மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத் தலைவர்மீது சிறப்பு விசாரணை

மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத் தலைவர்மீது சிறப்பு விசாரணை

2 mins read
17ec9652-07ec-4bd0-8e0c-826debb58573
மலேசியாவின் ஊழல் ஒழிப்பு ஆணையத் தலைவர் அஸாம் பாக்கியை அவரது பங்கு உரிமைகள் தொடர்பில் விசாரிக்க சிறப்பு குழு ஒன்று அழைப்பாணை விடுத்துள்ளது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் ஊழல் ஒழிப்பு ஆணையத் தலைவர் அஸாம் பாக்கியை அவரது பங்கு உரிமைகள் தொடர்பில் விசாரிக்க சிறப்புக் குழு ஒன்று இம்மாதம் 19ஆம் தேதி அழைப்பாணை விடுத்துள்ளது.

மலேசியாவின் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவரான திரு அஸாம், வெலோசிட்டி கெபிட்டல் பார்ட்னர் என்ற நிதிச் சேவை நிறுவனத்தின் பங்குகளில் 17 .7 பங்குகளை வைத்திருந்ததாகப் புளூம்பர்க் செய்தி நிறுவனம் இம்மாதம் 10ஆம் தேதி தெரிவித்தது.

அறிக்கை வெளியிடப்பட்ட சமயத்தில் அந்தப் பங்குகளின் மதிப்பு ஏறக்குறைய 800,000 ரிங்கிட்.

அதுதொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு ஒன்று, தொடக்கக் கட்ட அறிக்கையின் அடிப்படையில் திரு அஸாமின் பங்குகள் குறித்த விவரங்களை ஆராய்வதாக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ‌‌ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) அறிக்கை வெளியிட்டார்.

“தற்போது கிடைத்த ஆதாரங்கள் மதிப்பிடப்படுகின்றன. விசாரணையை முடித்துவைக்க தேவையான சாட்சியங்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்படும்,” என்றார் அவர்.

மலேசியாவின் அரசாங்க விதிமுறைப்படி அரசாங்க ஊழியர் ஒருவர் மலேசியாவில் உள்ள நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்க முடியும். அவர்கள் வைத்திருக்கும் பங்குகள் முதலீட்டில் ஐந்து விழுக்காட்டுக்கு மேல் அல்லது 100,000 ரிங்கிட்டுக்கு மேல் இருக்கக்கூடாது.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஒவ்வோர் அரசாங்க ஊழியரும் தங்கள் சொத்துகள் குறித்த கணக்குகளை அரசாங்கத்திடம் காட்டவேண்டும்.

புளூம்பர்க்கின் செய்தி தவறானது என்றும் அவதூறானது என்றும் கூறிய திரு அஸாம், பங்குகள் தொடர்பில் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார்.

மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம், சட்டத்துக்கு உட்பட்ட நிலையில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகளின் அடிப்படையில் செய்யப்படவில்லை என்றும் சொன்னது.

இதற்கிடையே, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளுக்கும் நிறுவனங்களைக் கைப்பற்ற முயன்ற வர்த்தகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து மற்றொரு விசாரணை நடைபெறுவதாகவும் புளூம்பர்க் செய்தி நிறுவனம் கூறியது.

அதை முன்னிட்டு நாட்டின் முன்னணி சிவில் சமூகக் குழுக்கள் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று கோரின.

குறிப்புச் சொற்கள்