நிலநடுக்க மனிதாபிமான உதவிக்கு நிதி திரட்டுகிறது சிங்கப்பூர் அறநிறுவனம்

1 mins read
d05764ff-afa3-43a6-879e-9cd8952f6b12
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,000ஐ கடந்துவிட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

மியன்மாரிலும் தாய்லாந்திலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட சிங்கப்பூரின் ரஹ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனம் (RLAF) நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து நிதி திரட்டும் முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவளிக்குமாறு அது வேண்டுகோள் விடுத்துள்ளது.

மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய இந்த இரு அமைப்புகளும் இணைந்து நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளன.

ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 30 வரை நடத்தப்படும் நிதித் திரட்டுக்கு ஆதரவு வழங்குமாறு RLAF அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

திரட்டப்படும் நிதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர், போர்வைகள், கூடாரம், சுகாதாரப் பொருள்கள் போன்றவற்றை வழங்க பெரிதும் கைகொடுக்கும். எனவே, பொதுமக்கள் ‘பேநவ்’ வாயிலாக நிதி வழங்கலாம் என்று அது தெரிவித்து உள்ளது.

நேரடியாக ரொக்கம் அளிக்க விரும்புவோர், நன்கொடைப் பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும் பள்ளிவாசல்களுக்கு ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 10 வரை சென்று உதவலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நூற்றாண்டு காணாத நிலநடுக்கத்தால் மியன்மாரில் 3,000க்கும் மேற்பட்டோரும் தாய்லாந்தில் 22 பேரும் உயிரிழந்தனர்.

70க்கும் மேற்பட்ட தாய்லாந்து மக்கள் இன்னும் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதேபோல, மியன்மாரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.

குறிப்புச் சொற்கள்