கொழும்பு: ஒரு ஹோட்டலிலிருந்து இணைய மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நம்பப்படும் 152 வெளிநாட்டவரை இலங்கை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) கூறினர். சம்பந்தப்பட்ட ஹோட்டல், இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு 80 கிலோமீட்டர் வடக்கே இருக்கும் சிலாவ் எனும் கடற்கரை நகரில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறைப் பேச்சாளர் ஃபிரெடரிக் வூட்லர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சோதனை நடவடிக்கையின்போது தப்பியோட முயன்ற சீன ஆடவர் இருவர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உள்ளூர்க் காவல்துறையினர் இருவர் கூறினர். மற்ற சந்தேக நபர்கள் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மேல்விசாரணையை முன்னிட்டு அவர்கள் இம்மாதம் ஒன்பதாம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மோசடி நடந்ததாக நம்பப்படும் நிலையத்தில் 143 மடிக்கணினிகள், 120 கணினிகள், 370 கைப்பேசிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சீன ஆடவர் சிலர் அப்பகுதியில் இருந்த ஒரு ஹோட்டல் முழுவதையும் வாடகைக்கு எடுத்து அதை மோசடி நிலையமாக நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டவர்களில் பெண்கள் எழுவர் உட்பட 133 பேர் சீனர்கள். 13 பேர் வியட்னாமைச் சேர்ந்தவர்கள்.
இணைய மோசடி மேற்கொண்டதாக நம்பப்படும் 135 சீனர்களை இலங்கை குடிநுழைவு அதிகாரிகள் சென்ற மாதம் கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் பிறகு நாடுகடத்தப்பட்டனர்.
தங்கள் நாட்டவர் இலங்கையில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கை முழுவதும் பல்வேறு பகுதிகளில் இணைய மோசடி நிலையங்களை நடத்திவந்த 230 சீன நாட்டவரை 2024ஆம் ஆண்டில் அதிகாரிகள் கைதுசெய்தனர். அதே ஆண்டு இணையம்வழி நிதி மோசடிச் செயல்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்பட்ட 200 இந்திய நாட்டவரையும் இலங்கைக் காவல்துறை கைதுசெய்தது.

