கொழும்பு: இணையத்தில் பேரளவிலான நிதி மோசடி தொடர்பாக இலங்கை அதிகாரிகள் 114 சீன நாட்டவரைக் கைது செய்துள்ளனர்.
கண்டி மாவட்டத்திலுள்ள குண்டசாலையில் சொகுசு பங்களா ஒன்றில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தியபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய குற்றக் கும்பல் ஒன்றைக் குறிவைத்து காவல்துறை இந்த அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
அதில் 15 மேசைக் கணினிகளும் 300க்கும் மேற்பட்ட கைப்பேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மோசடித் திட்டத்துக்கு அவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சந்தேக நபர்கள் தங்களின் நடவடிக்கைகளில் ஈடுபடப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பங்களாவின் 47 அறைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இலங்கையில் நிதி தொடர்பான மோசடிகள் குறித்த கவலை அதிகரித்துவரும் நிலையில், இணையக் குற்றங்களுக்கு எதிராகக் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கெனவே இணைய மோசடி தொடர்பாக அக்டோபர் 10ஆம் தேதி பாணந்துறை ஹோட்டல் ஒன்றில் சீன நாட்டவர் 20 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்; 400க்கும் மேற்பட்ட கைப்பேசிகள், 300க்கும் அதிகமான கணினி இணைப்புக் கம்பிவடங்கள், மடிக்கணினிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
அதற்குமுன் அக்டோபர் 7ஆம் தேதி நாவளவில் 19 சீன நாட்டவர் கைதாகினர். அக்டோபர் 6ஆம் தேதி ஹன்வெல்லையின் இரு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 30 சீன நாட்டவர், 4 இந்தியர்கள், 6 தாய்லாந்து நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆக அண்மைய கைது நடவடிக்கையுடன் ஒரே வாரத்தில் இணைய மோசடிகள் தொடர்பாக கிட்டத்தட்ட 200 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.