கொழும்பு: இலங்கையின் தேசிய காவல்துறை ஆணையம் 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரைப் பணிநீக்கம் செய்துள்ளது. அந்த அதிகாரி குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தடுக்க தவறியதாக ஆணையம் சொன்னது.
இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு முன் விடுத்த எச்சரிக்கையை அரசாங்கப் புலனாய்வுச் சேவைப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்தா ஜெயவர்தன பொருட்படுத்தவில்லை என்பதை முன்னிட்டு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி மூன்று ஹோட்டல்களையும் மூன்று தேவாலயங்களையும் குறிவைத்து ஒருங்கிணைப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்கு 17 நாள்களுக்கு முன்னர் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து திரு ஜெயவர்தனவுக்கு எச்சரிக்கைத் தகவல் வந்தது என நீதிமன்ற ஆவணங்கள் சுட்டின.
தாக்குதல்களில் 279 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் நடத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விசாரணையின்போது அலட்சியமாக இருந்தது, கடமையைச் சரிவர செய்யாதது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளில் திரு ஜெயவர்தன குற்றவாளி என்பது கண்டறியப்பட்டதாகக் காவல்துறை ஆணையம் (ஜூலை 19) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
“திரு ஜெயவர்தனாவின் கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆணையம் அவருக்கு அதிகபட்ச தண்டனையைத் தர முடிவெடுத்தது,” என்று அறிக்கை மேலும் சொன்னது.
இலங்கையில் குடிமக்கள்மீது நடத்தப்பட்ட ஆக மோசமான ஈஸ்டர் குண்டுவெடிப்பை அடுத்து திரு ஜெயவர்தன அரசாங்கப் புலனாய்வுச் சேவைப் பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் நிர்வாகத்தைப் பார்த்துகொள்ளும் காவல்துறையின் துணைத் தலைவர் பதவிக்கு அவர் பின் உயர்த்தப்பட்டார்.
எனினும் ஒழுங்கு விசாரணை நடைபெற்றதால் கடந்த ஓராண்டாக அவர் விடுப்பில் வைக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதக் குழு ஒன்று 2019 குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.
அதிபர் அனுரகுமர திசநாயக்காவின் தலைமைத்துவத்தின்கீழ் செயல்படும் இலங்கை அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்க உறுதி கூறியுள்ளது.


