ஆசியாவின் மோசடிகளுக்குத் தளமாக உருவாகும் இலங்கை

ஆசியாவின் மோசடிகளுக்குத் தளமாக உருவாகும் இலங்கை

படம்: ஏஎஃப்பி

09 Jun 2026 - 3:09 pm

2 mins read

கம்போடியாவில் உள்ள மோசடி மையங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையால், கும்பல்கள் இலங்கையிலுள்ள கடற்கரை விடுதிகளுக்கும் அலுவலகக் கட்டடங்களுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றன.

இதனால், குற்றச் செயல்களுக்கான புதிய மையமாக இலங்கை உருவாகும் வாய்ப்புள்ளது.

விசாவுக்கான தேவை இல்லாத பயணம், கட்டட இட வசதி, தொலைத்தொடர்பு வசதி, முறைசாரா பணப்பரிமாற்ற முறை ஆகிய காரணங்களால் இலங்கை, மோசடிக்காரர்களை ஈர்க்கக்கூடிய இடமாக மாறுவதாகப் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் புதிய இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு, 2026ல் 1,000க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலோ தலைநகர் கொழும்பிலோ கைது செய்யப்பட்டனர்.

“குடியேற்றத் துறையுடனும் மத்திய வங்கியுடனும் இணைந்து காவல்துறை, இதனைக் கட்டுப்படுத்துவதை உறுதிசெய்யக் கூட்டாகச் செயல்பட்டு வருகிறது,” என்று உதவி காவல் கண்காணிப்பாளர் பிரெட்ரிக் வூட்லர் கூறினார்.

இருந்தபோதும், வேகமாக இயங்கும், தொடர்ந்து மாறிவரும் இந்த மோசடிக் கும்பல்களைக் கட்டுக்குள் கொண்டுவர, குறுகிய கால அவகாசமே உள்ளது என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“இலங்கையில் சட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இந்தக் கும்பல்களின் மீது நாங்கள் தேவையான ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதில்லை என்பதே உண்மை. சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தியே அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்,” என்று இலங்கை புலனாய்வு அறிக்கை மையத்தின் இயக்குநர் தில்ருக்ஷி ஹந்துன்நெட்டி கூறினார்.

ஏப்ரல் மாதம் அதிகாரிகள் மேற்குக் கடற்கரையில் உள்ள சொத்து ஒன்றில் சோதனை நடத்தியபோது, அங்கு 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இணைய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.

சில நாள்களுக்குப் பிறகு, கொழும்புக்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல்துறை சோதனை நடத்தி மேலும் 120 வெளிநாட்டவர்களைக் கைது செய்தது.

அதிகாரிகளின் கண்காணிப்பு அதிகரிக்கும்போது, கும்பல்கள் சில பெரிய வளாகங்களிலிருந்து ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலக இடங்கள் ஆகியவற்றுக்கும் இடம் மாறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இவற்றை விரைவாக வாடகைக்கு எடுக்கவும், அதே வேகத்தில் கைவிட்டுச் செல்லவும் முடியும்.

“துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் கண்காணிப்பதற்கு மிகவும் கடினமான வழிகளில் இது நடக்கிறது,” என்று மோசடி எதிர்ப்பு லாப நோக்கமற்ற அமைப்பான ‘ஆபரேஷன் ஷாம்ராக்கின் நிறுவனர் எரின் வெஸ்ட் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மோசடிஇலங்கைஆசியாகம்போடியா