கொழும்பு: இலங்கையில் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடர்பில் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த ஆடவர் ஒருவருடன் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் மேலும் ஐவர் இந்தோனீசியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இத்தகவலை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் இலங்கையின் காவல் துறை தலைவர் பிரியந்தா வீரசூரியா.
கெஹெல்பத்ர பத்மே என்று அறியப்படும் மண்டினு பத்மஸ்ரீ பெரேரா, பிப்ரவரி மாதம் கொழும்பில் நீதிமன்ற அறையில் நிகழ்ந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது; மற்றும் போதைப் பொருள் விவகாரம் உள்ளிட்ட இதர 12க்கும் அதிகமான கொலைகள் தொடர்பான குற்றங்களுக்காகவும் தேடப்பட்டு வந்தவர்.
அவரும் அவரது கும்பலைச் சேர்ந்த நான்கு பேரும் கடந்த சனிக்கிழமை இரவு இந்தோனீசிய அதிகாரிகளின் பாதுகாப்புடன் வர்த்தக விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொழும்பு அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர்கள் அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
“கடும் அச்சுறுத்தலாக இருந்துவந்த குற்றக் கும்பலை வீழ்த்த உதவியதற்காக இந்தோனீசிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டின் காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார் அமைச்சர்.
இக்குழுவை சேர்ந்த இலங்கை பெண் ஒருவர் முந்தைய நாள் தனியாக விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
ஜகார்த்தாவில் வியாழக்கிழமை இந்தோனீசிய காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது இந்த ஆறு சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசியாவில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையை, வெளிநாட்டிலிருந்து செயல்படும் இலங்கை மக்களைக் கைது செய்வதற்கான மிகப்பெரிய சோதனை நடவடிக்கை என்று சுட்டினர் இலங்கை காவல் அதிகாரிகள்.
காவலர் துறை அளித்த தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 80 கும்பல் தொடர்பான துப்பாக்கிச் சூட்டு நடவடிக்கைகளில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.