கொழும்பு: இலங்கையின் ஆக மோசமான சுற்றுப்புற மாசுக்குக் காரணமாக இருந்த சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பலின் உரிமையாளர்கள் $1 பில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாகச் செலுத்தும்படி இலங்கை கூறியுள்ளது.
அதற்குப் பதிலளித்த கப்பலின் உரிமையாளர்கள் நியாயமான இழப்பீட்டைக் கேட்கும்படி இலங்கையிடம் கேட்டுக்கொண்டனர்.
2021ஆம் ஆண்டு தீப்பிடித்ததால் ஏற்பட்ட கடல் மாசுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த எக்ஸ்-பிரெஸ் ஃபீடர்ஸ் நிறுவனம் ஓராண்டுக்குள் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தும்படி இலங்கை உச்ச நீதிமன்றம் ஜூலையில் உத்தரவிட்டது.
தீ மூண்டதை அடுத்து கொழும்பின் துறைமுகத்தில் மூழ்கிய எம் வி எக்ஸ்-பிரெஸ் பர்ல் கப்பலின் தலைவர்மீதும் உள்ளூர் நிறுவனம் மீதும் உச்ச நீதிமன்றம் குற்றவியல் வழக்கைத் தொடுத்துள்ளது.
“தொடக்கத்திலிருந்தே எக்ஸ்-பிரெஸ் ஃபீடர்ஸ் இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட சேதத்துக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் அனைத்துவித தூய்மைப்படுத்தும் பணிகளில் முழுமையாக உதவிசெய்யவும் அது இணங்கியது,” என்று கப்பலின் உரிமையாளர்கள் அறிக்கையில் குறிப்பிட்டனர்.
இழப்பீடு கொடுக்கவேண்டியதன் அவசியத்தைத் தாங்கள் உணர்ந்துள்ளபோதும் அது நியாயமான வகையில் இருக்கவேண்டும் என்று உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.
அமிலம், பிளாஸ்டிக் மூலப் பொருள்கள் போன்ற அபாயகரமான சரக்குகள் கொண்ட 81 கொள்கலன்கள் கப்பலில் இருந்தன.
கப்பலிலிருந்து வெளியேறிய டன் கணக்கிலான நுண் பிளாஸ்டிக் துகள்கள் 80 கிலோமீட்டர் நீலமுள்ள இலங்கையின் மேற்குக் கரைப் பகுதியை வெகுவாகப் பாதித்துள்ளது. பல மாதங்களாக அங்கு மீன்பிடி தொழிலும் முடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
அந்தச் சேதத்தை அகற்றி, கடற்கரைகளைத் துப்புரப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் எக்ஸ்-பிரெஸ் ஃபீடர்ஸ் ஏற்கெனவே $150 மில்லியன் டாலர் வரை செலவு செய்துவிட்டதாகத் தெரிவித்தது.
கப்பலில் ஏற்பட்ட நைட்ரிக் அமிலக் கசிவால் தீ மூண்டிருக்கக்கூடும் என்று இலங்கை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இலங்கைக் கடற்பகுதிக்குள் வரும் முன் கத்தாரிலும் இந்தியாவிலும் உள்ள துறைமுகங்கள் கசியும் அந்த நைட்ரிக் அமிலத்தைக் கப்பலிலிருந்து அப்புறப்படுத்த அனுமதிக்கவில்லை.
அரசாங்கமும் கப்பல் உரிமையாளர்களும் சுற்றுப்புறப் பேரிடராக மாறக்கூடிய தீயைத் தடுக்க தவறிவிட்டதாக சுற்றுப்புற ஆர்வலர்களும் வழக்குத் தொடுத்துள்ளனர்.
கப்பல் உரிமையாளர்கள்மீது இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது.