இலங்கையில் தொழுநோய் பரவல்; பாதிக்கப்பட்டோரில் 12% சிறுவர்கள்

2 mins read
60bdcb4a-a8d0-48ad-a40a-c4e87115d74c
இலங்கையில் தொழுநோய் ஏற்பட்டுள்ளவர்களின் ஏறக்குறைய 10% முதல் 12% நோயாளிகள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் - படம்: இலங்கை ஊடகம்

கொழும்பு: இலங்கை நாட்டில் ஓராண்டுக்குள் மொத்தம் 1,800 தொழுநோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, நோயாளிகளில் 12 விழுக்காட்டினர் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஆவர்.

தொழுநோய் பாக்டீரியாவால் ஏற்படுகிறது என்றும் கிட்டத்தட்ட 6 விழுக்காடு நோயாளிகளுக்கு இன்னும் காயங்கள் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோய் பரவாமல் தடுக்க முன்கூட்டியே அடையாளம் காணுதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், தொழுநோய்க்கு சிகிச்சை இருந்தாலும், அந்நோய் குறித்த கட்டுக்கதைகள், தவறான புரிதல்களால் பல நோயாளிகள் சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின்படி ஒருவர், ஒரு வாரத்தில் 20 மணி நேரங்களுக்கு மேலாக, கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாக இருந்தால், தொழுநோய் தொற்றுக்கு உள்ளாகலாம் என்று தொழுநோய் ஒழிப்பு இயக்கத்தின் சமூக மருத்துவரான டாக்டர் டிலினி விஜேசேகர கூறியுள்ளார்

இலங்கையில், தொழு நோயாளிகள் தோல் நோய் சிகிச்சை நிலையங்களில் பல வகையான சிகிச்சைகளைப் பெறுகின்றனர்.

எனினும், ஏறக்குறைய 10% முதல் 12% நோயாளிகள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்று விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பெரும்பாலான தொழுநோய்ச் சம்பவங்கள் 25 முதல் 45 வயது வரையிலான ஆண்களிடையே பதிவாகியுள்ளன. மேற்கு, கிழக்கு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சம்பவங்கள் காணப்படுகின்றன.

மற்றவர்களுக்குப் பரவக்கூடியது, தொற்றாதது என இரு வகையான தொழுநோய் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் விளக்கினர். இந்த நோய் பெரும்பாலும் தோலையும் நரம்புகளையும் பாதிக்கிறது. சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், நோய் படிப்படியாக நிரந்தர குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்.

அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுமாறும் நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்கு ஆதரவளிக்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆரம்பகால சிகிச்சை கடுமையான பிரச்சினைகளைத் தடுப்பதுடன், பரவலைக் குறைக்கும் என்று அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்