கொழும்பு: வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற இருக்கும் இலங்கை அதிபா் தோ்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழர் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
எதிா்க்கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டணி (டிஎன்ஏ) திங்கட்கிழமை (செப்டம்பர் 16) அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. அந்தக் கூட்டணியின் மூத்த தலைவா் மாவை சேனாதிராஜா செய்தியாளா்களிடம் இதனைத் தெரிவித்தார்.
சஜித்தை ஆதரிப்பது என்று செப்டம்பர் 1ஆம் தேதி எடுத்த முடிவை மறுஉறுதிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற அரசியல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அதிபா் தோ்தலில் தற்போதைய எதிா்க்கட்சி தலைவா் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பது என்று கூட்டத்தில் அதிகாரபூா்வமாக முடிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.
இலங்கை அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரா திசநாயக, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 போ் போட்டியிடுகின்றனா்.
தற்போதைய நிலவரப்படி, மார்க்சிஸ்ட் ஆதரவாளரான ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைவர் அனுரா திசநாயகவிற்கு வெற்றி விகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
57 வயதாகும் சஜித் பிரேமதாச தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். 2022ஆம் ஆண்டு முதல், தேசிய மக்கள் சக்தியின் (என்பிபி) தலைவராக அவர் உள்ளார்.
போட்டி கடுமையாகி இருக்கும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவு சஜித்திற்குக் கூடுதல் பலத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, 38 வேட்பாளர்களில் தமிழரான பாக்கியசெல்வம் அரியநேத்ரனுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக ஒருசில தமிழ் கட்சிகள் கூறி வருகின்றன. தமிழ் தேசியக் கூட்டணியின் முடிவில் தமக்கு உடன்பாடில்லை என்று அவர்களில் ஒருவரான எஸ் ஸ்ரீதரன் தெரிவித்து உள்ளார்.
போட்டியிலிருந்து விலகுமாறு அரியநேத்ரனை தமிழ் தேசியக் கூட்டணி கேட்டுக்கொண்டபோதும் அவர் போட்டியில் நீடிக்கிறார். இதனால், ஒருதரப்பினர் சஜித் பிரேமதாசவையும் மற்றொரு தரப்பினர் அரியநேத்ரனையும் ஆதரிக்கும் நிலை உருவாகி உள்ளது.
அதிபா் தோ்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்க தமிழ் கட்சிகளான டெலோ, ப்ளாட், டிபிஏ, இபிஆா்எல்எஃப் உள்ளிட்டவை கடந்த ஜூலையில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரியநேத்ரன் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். எனினும், தமிழ் தேசியக் கூட்டணி இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.