ஈரானின் 40 மாலுமிகளை மீட்டது இலங்கை

ஈரானின் 40 மாலுமிகளை மீட்டது இலங்கை

படம்: பிக்சாபே

26 Oct 2026 - 11:49 am

2 mins read

கொழும்பு: இலங்கைக் கடல் எல்லைக்கு அப்பால் அனைத்துலகக் கடற்பகுதியில் பல வணிகக் கப்பல்களில் இருந்த ஈரானின் 40 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாதுகாப்பாக ஈரான் திரும்புவதற்கு உதவி வழங்கியுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சில அவசர மருத்துவச் சிகிச்சைத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, மாலுமிகளை மீட்குமாறு கொழும்பிலுள்ள ஈரானியத் தூதரகத்திடமிருந்து அரசதந்திர வழிகளில் கோரிக்கை வந்ததாக அவர் கூறினார்.

மாலுமிகள் மீட்கப்பட்டதற்கான கூடுதல் விவரங்களை வெளியுறவு அமைச்சு வெளியிடவில்லை. எனினும், அந்த மாலுமிகள் பயணம் செய்தவை அமெரிக்காவின் பொருளியல் தடைகளுக்கு உள்ளான எண்ணெய்க் கப்பல்கள் என்று இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழ் உள்ளிட்ட சில ஊடகங்கள் குறிப்பிட்டன. ஈரான் மீதான போரின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளது.

19 கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகள், இலங்கைத் தலைநகரான கொழும்பிலிருந்து 126 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காலி துறைமுகத்தின் கரைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) அதிகாலையில் அவர்கள் மீண்டும் ஈரான் புறப்பட்டுச் சென்றதாக அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறினார்.

இத்தகைய மனிதாபிமானப் பணிகளில் பொதுவாக இலங்கைக் கடற்படையும் கடலோரக் காவற்படையும் உதவிகளை வழங்கும் என்று அரசு வட்டாரம் ஒன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி, ‘ஐரிஸ் டேனா’ என்ற ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அக்கப்பல் மூழ்கியபோதும் மனிதாபிமான அடிப்படையில் ஈரானிய மாலுமிகள் பலரை இலங்கை மீட்டது.

அத்தாக்குதலில் உயிரிழந்த 80க்கும் மேற்பட்ட மாலுமிகளின் உடல்கள் மார்ச் மாத நடுப்பகுதியில் விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதன் பின்னர், மூழ்கிய கப்பலில் இருந்து தப்பிய 32 மாலுமிகளும் மற்றொரு கப்பலைச் சேர்ந்த 208 சிப்பந்திகளும் ஏப்ரல் மாதத்தில் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்