கொழும்பு: இலங்கைக் கடற்பகுதியில் ஈரானியப் போர்க்கப்பல்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் கொல்லப்பட்ட 84 கடலோடிகளின் உடல்களை ஈரானியத் தூதரகத்திடம் ஒப்படைக்கும்படி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் இந்தியா ஏற்பாடு செய்த கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய ‘ஐரிஸ் தேனா’ என்ற அந்தப் போர்க்கப்பல்மீது நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், காலி நகரக் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று, கொல்லப்பட்ட கடலோடிகளின் உடல்களை ஈரானியத் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் புதன்கிழமை (மார்ச் 11) உத்தரவிட்டிருக்கிறது.
தற்போது அவர்களின் உடல்கள் காலி தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இயந்திரக் கோளாற்றால் தனது கடற்பரப்பில் தத்தளித்த இன்னொரு ஈரானியக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208 பேருக்கு இலங்கை 30 நாள் நுழைவு அனுமதி வழங்கியுள்ளதாகத் துணைத் தற்காப்பு அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட கடலோடிகள் குறித்து கொழும்பில் உள்ள ஈரானியத் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அடுத்த சில நாள்களில் ஈரானிடமிருந்து தகவல் வரும் என எதிர்பார்க்கிறோம்,” என்று திரு ஜெயசேகர கூறினார்.
‘ஐரிஸ் தேனா’ போர்க்கப்பல் மீதான தாக்குதலில் 32 பேர் உயிர்பிழைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, 183 பேருடன் ‘ஐரிஸ் லவண்’ என்ற மூன்றாவது ஈரானியப் போர்க்கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்களால் உலகச் சந்தைகள் நிலைகுலைந்து போயுள்ளன; கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது; வணிகமும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

