மன்னார்: இலங்கையின் காற்றாலைத் திட்டத்திற்கு உள்ளூர் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மன்னார் தீபகற்பப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் கடல்வளம் குறைந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
சுழலும் காற்றாலை விசிறிகளின் நிழல் நீரில் விழுவதால் மீன்கள் ஆழமற்ற பகுதிக்கு வருவதில்லை என்றும் இந்திய இழுவைப் படகுகளின் போட்டியும் தங்களைப் பாதிக்கிறது என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அங்கு, ஏறக்குறைய 20 ஆண்கள் இயந்திரக் கருவிகளின் உதவியோடு மீன்பிடி வலையைக் கடற்கரைக்கு இழுக்க முயன்றனர். ஆனால் பிடிபட்ட மீன்களின் அளவு மிகக் குறைவாகவே இருந்தது.
“சிறுவனாக இருந்ததிலிருந்தே நான் இங்கு மீன்பிடித்து வருகிறேன்,“ என்று ஏமாற்றத்துடன் வலைக்குள் பார்த்தபடி கூறினார் 65 வயதான வெங்கடசாமி காளிமுத்து. அதில் சில நல்ல மீன்கள், சிறிய பொடி மீன்கள், சில கடற்பாசிக் கட்டைகள் மட்டுமே இருந்தன.
“இந்தக் காற்றாலைகள் அமைப்பதற்கு முன்பு, நாங்கள் நிறைய மீன்களைப் பிடித்தோம். இப்போது, மிகக் குறைவாகவே கிடைக்கிறது,” என்றார் அவர்.
காற்றாலைகள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் கண்டன. அப்போதிலிருந்து, குறைந்துவரும் மீன் பிடிப்பு முதல் வெள்ளப்பெருக்கு வரை பல பிரச்சினைகளுக்கு அவையே காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கு மோதலால் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் அவசியமாகின்றன. இருப்பினும் காற்றாலைகளை வேறு இடங்களில் அமைக்கலாம் என உள்ளூர்க் குடிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை நாளொன்றுக்கு 5,000 ரூபாய் வரை ஈட்டிய மீனவர்களின் வருமானம், தற்போது 1,000 ரூபாயாகக் குறைந்துவிட்டது. இதனால் பேசாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமங்களைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள கான்கிரீட் அடித்தளங்களும் சாலைப் பள்ளங்களும் மழைநீரைக் கடலுக்குள் வடியவிடாமல் தடுக்கின்றன.
இதனால் பருவமழைக் காலங்களில் கழிப்பறைகள் நிரம்பி வழிவதுடன், கிணற்று நீரும் பாழாகிறது. வீடுகளுக்குள் ஒரு மீட்டர் வரை வெள்ளம் புகுந்து விவரிக்க முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கை மின்சாரக் கழகத்திற்குச் சொந்தமான இத்திட்டத்தின் முதற்கட்டத்தில், 30 காற்றாலைகள் 2020ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டன. தற்போது மேலும் 14 காற்றாலைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 52 காற்றாலைகளுக்கான மூன்றாவது கட்ட ஒப்பந்தத்தை விலைப் பிரச்சினை காரணமாக அரசாங்கம் 2025ல் ரத்துச் செய்தது.
2030ஆம் ஆண்டுக்குள் 70 விழுக்காட்டு மின்சாரத்தைப் புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் உற்பத்தி செய்ய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
வெள்ளப் பிரச்சினையைக் குறைக்கும் நோக்கத்துடன் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் புதிய திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணதிலக கூறியுள்ளார்.
எனினும், நிர்வாகம் தங்களை ஏமாற்றுவதாகக் கூறி மன்னார் மக்கள் குழுவின் சார்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
