ஒசாக்கா: ஜப்பானின் ஒசாக்கா பகுதியில், சனிக்கிழமை (பிப்ரவரி 14) இரவு கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் நடந்தது.
இதில் 17 வயது ஆடவர் மாண்டார். மேலும் இரண்டு ஆடவர்களுக்குக் காயம் ஏற்பட்டது.
கத்திக்குத்துத் தாக்குதல் பரபரப்பான டாடன்போரி வர்த்தகப் பகுதியில் நடந்தது.
கடைத்தொகுதி ஒன்றின் முதல் மாடியில் கத்திக்குத்து நடந்ததாக இரவு 11.55 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் வயது 20களில் இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
தாக்குதலுக்குத் தொடர்புடைய நபர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன்பின்னர் அது வன்முறையாக மாறியதாகவும் தொடக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய பிறகு சந்தேக நபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்தவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நரா வட்டாரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நெஞ்சுப் பகுதி உட்படப் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
காயமடைந்த இரு ஆடவர்களுக்கும் உடலின் மேற்பகுதியில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. விசாரணை தொடர்கிறது.

