வாகன, கத்திக்குத்துத் தாக்குதல் ஒரு ‘பயங்கரவாதச் செயல்’: தென்கொரிய அதிபர்

2 mins read
b02bd278-ba35-4687-8199-81aae7395624
தாக்குதல் நடந்த இடத்தை ஆராயும் தென்கொரியக் காவல்துறையினர். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியத் தலைநகர் சோல் அருகில் வியாழக்கிழமை நடந்த வாகன, கத்திக்குத்துத் தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயல் என்று தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் கூறியிருக்கிறார்.

இச்சம்பவத்தின் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளைக் கையாளுமாறு காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டதாக அவரது பேச்சாளர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

“சியோயோன் சுரங்க ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல், அப்பாவி மக்களுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்,” என்று திரு யூன் கூறியதாக யொன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சியோங்னாம் நகரின் சியோயோன் ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ள ஏகே பிளாசாவில் மாலை ஆறு மணியளவில் சம்பவம் நடந்தது.

ஓர் ஆடவர் தனது காரை வழிப்போக்கர்கள்மீது மோதினார். பிறகு, அங்கிருந்த பல்பொருள் கடையில் எதிர்ப்பட்டவர்களைக் கத்தியால் குத்தினார்.

கத்திக்குத்து தாக்குதலில் ஒன்பது பேரும் வாகனம் மோதி ஐவருமாக மொத்தம் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மீட்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய ஆடவரைக் காவல்துறையினர் வியாழக்கிழமை கைதுசெய்தனர். அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

அவரது குடும்பப்பெயர் ‘சோய்’ என்றும் அவர் 20 வயதுகளில் உள்ளவர் என்றும் மட்டுமே காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் விநியோகத் துறையில் வேலை செய்ததாகவும் அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதல்கள் நடப்பது அரிது. நோக்கத்துடன் கொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2011 முதல் 2018 வரை 100,000 மக்களில் ஒன்றுக்கும் குறைவாகவே இருந்தது. உலகச் சராசரியான 100,000 மக்களில் 5.8 பேர் என்பதைவிட இது குறைவு.

குறிப்புச் சொற்கள்