ஜூன் இறுதி வரை நிலையான எரிபொருள் விநியோகம்: பெட்ரோனாஸ்

ஜூன் இறுதி வரை நிலையான எரிபொருள் விநியோகம்: பெட்ரோனாஸ்

1 mins read
ஒரு மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மலேசியா வந்தடைந்தது
b1e2b144-2296-468b-b752-dfd4e8737e7a
ஓ‌ஷன் தண்டர் கப்பல். - படம்: வெசல் ஃபைண்டர்

கோலாலம்பூர்: பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஓ‌ஷன் தண்டர் கச்சா எண்ணெய்க் கப்பல் மலேசியாவைச் சென்றடைந்தது; ஈராக்கின் பாஸ்ரா நகரிலிருந்து ஒரு மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை அக்கப்பல் கொண்டு வந்தது.

மலேசிய தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் எடுத்துவரும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் ஓஷன் தண்டர் கப்பல் வந்தடைந்ததும் அடங்கும். மத்திய கிழக்குப் பூசல் காரணமாக ஹோர்முஸ் நீரிணையின் வழியாக மற்ற நாடுகளுக்கு எரிபொருள் கொண்டுசேர்ப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் இருப்பதை உறுதிசெய்யும் முயற்சிகளை பெட்ரோனாஸ் எடுத்து வருகிறது.

“தேசிய அளவில் விநியோகிக்கப்படும் எண்ணெய்யில் 38 விழுக்காடு, ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கொண்டுவரப்படுகிறது. அதில் ஒரு பகுதியை ஓ‌ஷன் தண்டர் கொண்டுவந்தது,” என்று பெட்ரோனாஸ், இன்ஸ்டகிராமில் அறிக்கை முலம் தெரிவித்தது. பல்வேறு இடங்களிலிருந்து எண்ணெய்யைத் தருவிப்பதாகவும் அது குறிப்பிட்டது

“இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் எல்லா நிலையங்களிலும் ஜூன் மாத இறுதி வரை போதுமான எரிபொருள் இருக்கும் என்று பெட்ரோனாஸ் உறுதிப்படுத்துகிறது,” என்றும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஓ‌ஷன் தண்டர், வெற்றிகரமாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்ததாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்