பெய்ஜிங்: சீனாவின் வடமேற்கில் உள்ள சின்ஜியாங் மாநில நடுநிலைப் பள்ளியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 14 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (நவம்பர் 18) பிற்பகல் 3.25 மணியளவில் காஷ்கரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்தது என்று நகர நிர்வாகத்தின் சமூக ஊடகத்தில் வெளியான அறிக்கை தெரிவித்தது.
மாணவர்கள் தங்குவிடுதிக்கும் வகுப்பறைக் கட்டடத்திற்கும் இடையே சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு மாணவர் கதவருகே விழுந்துவிட்டதாகவும் அதன் பிறகு ‘தள்ளுமுள்ளு’ ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 11 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. கண்காணிப்புக்காக அவர்கள் மருத்துவமனையில் தங்கியுள்ளனர் என்று கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர்.
பெய்ஜிங்கிலிருந்து ஏறத்தாழ 4,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காஷ்கர் நகர். சீனாவின் சிறுபான்மை உய்குர் சமூகத்தினரின் கலாசார மையமாக அது கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சியான்ஜியாங்கில் உள்ள உய்குர் இன மக்கள் மீதும் இதர முஸ்லிம்கள் மீதும் கடுமையான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அவற்றை இனப்படுகொலை நடவடிக்கைகள் என்று சாடுகின்றன.
ஆனால், பெய்ஜிங் அவற்றை மறுத்துவருகிறது.

