சிப்பாங்: 2029ஆம் ஆண்டு முதல் தொடக்கப் பள்ளியில் சேருவதற்கான கட்டாய வயதை ஏழிலிருந்து ஆறாகக் குறைக்க மலேசியா திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக, பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஓராண்டு முன்னதாகவே முதலாம் ஆண்டில் சேர்ப்பதற்கு அனுமதிக்கும் வகையில், இரண்டாண்டு கால இடைக்கால ஏற்பாடு ஒன்று அமல்படுத்தப்படும்.
இந்த மாற்றமானது, பள்ளிகளைத் தயார்படுத்தவும், பாடத்திட்டத்தை மாற்றியமைக்கவும், இளம் மாணவர்களுக்குக் கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களைத் தகுதியுடையவர்களாக்கவும் கல்வி அமைச்சிற்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கும் என்று கல்வித்துறை தலைமை இயக்குநர் முகம்மது அசம் அகமது தெரிவித்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கல்விச் சட்டம் 1996ல் திருத்தங்கள் தேவைப்படும். இது குறித்து பெற்றோரிடமிருந்து ஆரம்பத்தில் மாறுபட்ட கருத்துகளே வெளிப்பட்டன. இருப்பினும், முன்கூட்டியே பள்ளியில் சேர்ப்பதற்கான ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30 நிலவரப்படி, 2027ஆம் கல்வியாண்டிற்காக, ஆறு வயதுடைய குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்ப்பதற்கான 73,498 விண்ணப்பங்கள் அமைச்சுக்கு வந்துள்ளன. இது பெறப்பட்ட மொத்தம் 491,649 விண்ணப்பங்களில் சுமார் 15 விழுக்காடாகும்.
ஊடகச் சந்திப்பில் பேசிய திரு ஆசம், இந்தக் கொள்கையைச் செயல்படுத்தவும், அது தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதி செய்யவும் இந்த ஆண்டே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாகக் கூறினார்.
“திட்டமிடப்பட்ட ஒரு முயற்சி, முழுமையாகச் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே நின்றுவிடுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் திறன் அமைச்சுக்கு உண்டு என்று திரு ஆசம் நம்பிக்கை தெரிவித்தார். தேவைக்கேற்ப, ‘தொழில்துறை கட்டுமான முறை’யைப் பயன்படுத்தி மூன்று மாதங்களுக்குள் கூடுதல் வகுப்பறைகளைக் கட்ட முடியும் என்று அவர் கூறினார்.
இது தவிர, பள்ளிகளை இரு நேரவேளைகளில் நடத்துவது, குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றுவது போன்ற பிற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.
ஆறு வயதுடைய குழந்தைகளின் கற்றல் தேவைகளை பாடத்திட்டம் ஏற்கெனவே கருத்தில் கொண்டுள்ளது என்றும் அதற்கேற்ப ஆசிரியர் பயிற்சிகளும் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கொள்கையானது முறையான பள்ளிக் கல்வியைத் தொடங்கும் வயதை முன்னுக்குக் கொண்டுவருவதற்காக மட்டுமல்லாமல், சமூக, தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டுள்ள பரந்த மாற்றங்களுக்கு ஏற்பவும், அதே வேளையில் கல்விக்கான சமமான வாய்ப்புகளை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது என்று திரு ஆசம் தெரிவித்தார்.
