ஹார்வர்ட் விசா விண்ணப்பப் பணிகளைத் தொடர தூதரகங்களுக்குப் பச்சைக்கொடி

1 mins read
38b08a7b-623b-4fc4-8286-464e3f34bb00
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் - படம்: ஏஎஃப்பி

ஹார்வர்ட் பல்லைக்கழகத்தில் சேர்ந்து பயில மாணவர்கள் சமர்ப்பித்துள்ள விசா தொடர்பான விண்ணப்பப் பணிகளைத் தொடருமாறு உலகெங்கும் உள்ள தூதரகங்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சு, அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) இரவு கேட்டுக்கொண்டது.

அத்தகைய விசா விண்ணப்பங்களை ஏற்க வேண்டாம் என்று அதற்கு முந்தைய தினம் அது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவர், வருகையாளர் பரிமாற்றத் திட்டத்தில் பங்கெடுக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்குத் தடை விதிக்கப்படும் என்று மே 22ஆம் தேதியன்று அமெரிக்க உள்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.

இத்திட்டத்தில் பங்கெடுக்கும் கல்விக் கழகங்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

அமெரிக்காவில் உள்ள தனிநபர்களுக்குத் தொல்லை கொடுக்க, அமெரிக்காவை எதிர்க்கும், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வெளிநாட்டினரை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அனுமதிப்பதாக அமைச்சு குற்றம் சுமத்தியது.

இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் பயில்வதைத் தடுக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எடுத்த முயற்சிகளை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

எனவே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்கள் அதுதொடர்பான விசாவுக்கு விண்ணப்பம் செய்யும்போது அதற்கான பணிகளைத் தொடருமாறு தூதரகங்களுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சு தகவல் அனுப்பி உள்ளது.

குறிப்புச் சொற்கள்