மலேசியக் குடியுரிமை விண்ணப்பங்கள் பல்லினப் பிரச்சினை என்பதைக் காட்டுகின்றன

மலேசியக் குடியுரிமை விண்ணப்பங்கள் பல்லினப் பிரச்சினை என்பதைக் காட்டுகின்றன

2 mins read
f5eabd78-f3d8-445e-b4a1-330ab44a0408
ஆவணமற்ற அல்லது குடியுரிமையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முக்கியமாக மலாய்க்காரர்களும் முஸ்லிம்களுமே என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: மலாய் மெயில்

பெட்டாலிங் ஜெயா: நாடற்றவராக இருப்பது அல்லது குடியுரிமை இல்லாமல் இருப்பது என்பது மலேசிய இந்தியர் அல்லது மலேசியச் சீனர் சமூகங்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினையன்று என்று சிலாங்கூர் மாநில சபாநாயகர் லாவ் வெங் சான் கூறியுள்ளார்.

“நாடற்ற நிலை என்பது இந்தியர், சீனர், மலாய் அல்லாதவர் அல்லது முஸ்லிம் அல்லாதவர் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை மட்டுமன்று,” என்று அரசு சாரா அமைப்பான கிராமப்புறங்களுக்கான மனிதவள மேம்பாடு மலேசியா (டிஎச்ஆர்ஆர்ஏ) அமைப்பின் 20வது ஆண்டுவிழா இரவு விருந்தில் உரையாற்றியபோது அவர் கூறினார்.

மலேசியக் குடியுரிமைக்கான விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக, தேசியப் பதிவுத் துறைக்கு நேர்காணல்களுக்குச் சென்றுகொண்டிருந்த குடியுரிமையற்ற ஒருவருடன் தான் சென்றபோது ஏற்பட்ட தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைக் கூறுவதாகத் திரு லாவ் தெரிவித்தார்.

குடியுரிமை நேர்காணல்களுக்குச் சென்றுகொண்டிருந்த மற்றவர்களைப் பார்த்தவாறே, “நேரில் பார்த்தால்தான் நம்புவோம் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

“ஆவணமற்ற அல்லது குடியுரிமையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முக்கியமாக மலாய்க்காரர்களும் முஸ்லிம்களுமே என்பதை உங்களால் காண முடியும். இது எனது தனிப்பட்ட கண்ணோட்டம்.

“எனவே, இந்தப் பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் பேசி, அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இதை ஓர் இனவாதப் பிரச்சினையாகப் பயன்படுத்த விரும்பும் அரசியல்வாதிகள், இதை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், இது ஒருபோதும் இனம் மற்றும் சமயம் சார்ந்த பிரச்சினையாக இருந்ததில்லை. இது வாழ்வாதாரப் பிரச்சினை, இது இளம் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினை.

“மேலும், மலேசியாவில் அவர்கள் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவுவதற்காக, நம்மால் முடிந்த அனைத்து வளங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறிய அவர், நாடற்றோர் பிரச்சினைகளில் டிஎச்ஆர்ஆர்ஏ மலேசியா மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அயராத உழைப்பைப் பாராட்டினார்.

2018 முதல் 2024 அக்டோபர்வரை ‘மைசெல்’ (MySel) அமைப்பு பெற்ற 1,799 குடியுரிமை விண்ணப்பங்கள், சிலாங்கூரில் குடியுரிமையற்ற நிலை ஒரு பல்லினப் பிரச்சினை என்பதைக் காட்டுகின்றன. இந்த விண்ணப்பங்கள் மலாய்க்காரர்கள் (520), சீனர்கள் (420), இந்தியர்கள் (380), பழங்குடியினர் (139) மற்றும் பிறர் (340) ஆகியோரிடமிருந்து வந்துள்ளன.

1,799 குடியுரிமை சம்பவங்களில், 614 பேர் தங்களது குடியுரிமை விண்ணப்பங்களில் வெற்றி பெற்றனர். இதுவும் பல்லினப் பிரச்சினையாகவே இருந்தது. அவர்களில் மலாய்க்காரர்கள் (210), சீனர்கள் (180), இந்தியர்கள் (190), பழங்குடியினர் (10), பிறர் (24) என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்