கார்டோம்: சூடானின் வடக்குப் பகுதியான டார்ஃபூரில் இருக்கும் மருத்துவமனையின்மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
ஜனவரி 24ஆம் தேதி நடந்த இத்தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் வன்மையாகக் கண்டித்துள்ளது. மேலும், மருத்துவமனை போன்ற சுகாதாரச் சேவை வழங்கும் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டடங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியசுஸ் சனிக்கிழமையன்று (ஜனவரி 25) தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் கேட்டுக்கொண்டார்.
மேலும், தாக்குதலால் சேதமான கட்டடங்களைச் சீரமைக்க அந்தக் கட்டடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் திரு டெட்ரோஸ் சொன்னார்.
அந்நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து வரும் அதிகார போராட்டம், சூடானின் அமைதி மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது.
இவ்விரு தரப்பினருக்கும் இடையேயான மோதல்கள் காரணமாக ஏற்படும் மனிதநேய நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

