ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநில அரசாங்கம், வெள்ளக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக இரண்டு சொத்து நிறுவனங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜோகூர் பாரு, கூலாய் ஆகிய இரண்டு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட அந்தச் சொத்து நிறுவனங்கள் உருவாக்கும் கட்டடங்களே காரணம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சொத்து நிறுவனங்கள் இரண்டும் கட்டுமான, வடிகால் கட்டுப்பாட்டு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவில்லை.
அதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 14 நாள்கள் வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில வீடமைப்பு, உள்ளூர் அரசாங்கக் குழுத் தலைவர் முகமது ஜாஃப்னி முகமது ஷுக்கோர் கூறினார்.
சரியான வடிகால் நடைமுறைகள் அவசியம் என வலியுறுத்தல்
வடிகால் நடைமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படவேண்டும் என்று திரு முகமது ஜாஃப்னி உத்தரவிட்டார்.
“ஜோகூரில் உள்ள அனைத்து சொத்து நிறுவனங்களும் கட்டுமான நிபந்தனைகளை முழுமையாகப் பின்பற்றவேண்டும். வடிகால் கட்டமைப்பு, மண்ணரிப்பைத் தடுப்பது ஆகியவை அவற்றுள் அடங்கும்,” என்றார் திரு முகமது ஜாஃப்னி.
அவ்வாறு செய்ய தவறும்போது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் நேரடி பாதிப்புகள் ஏற்படும் என்று திரு ஜாஃப்னி நினைவூட்டினார்.

