500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறையில் புதைக்கப்பட்ட பானை; அதற்குள் உடையாத முட்டைகள், அரிசி

500 ஆண்டுகளுக்கு மேலாக மண் பானைக்குள் வைத்து புதைக்கப்பட்ட அரிசி, உடைந்துபோகாத முட்டைகள் போன்றவற்றை தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குவாங்கான் எனும் நகரத்தில் உள்ள பூங்கா ஒன்றில் அமைந்துள்ள மிங் வம்சத்தினரின் கல்லறையில் அவை கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த நகர அருங்காட்சியக அதிகாரி டான் யுன்மெய் குறிப்பிட்டார். 1501ஆம் ஆண்டு இறந்துபோன யாங் மிங், அவரது இரண்டு மனைவிகள் ஆகியோரது கல்லறையாக அது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பானைக்குள் வைக்கப்பட்ட முட்டைகளின் ஓட்டில் கீறலோ உடைசலோ இல்லை. அதில் எத்தனை முட்டைகள் வைக்கப்பட்டிருந்தன என்ற விவரம் தெரியவில்லை.

கல்லறைக்குள் ஒரே மாதிரியான வெப்பநிலை, ஈரப்பதம் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அந்த அதிகாரி, மரத்தாலான சவப்பெட்டிக்குள் 2 முதல் 5 செ.மீ. வரையிலான சுண்ணாம்பு அடுக்கு இருந்ததாகவும் அதன் காரணமாக அரிப்பு, ஈரப்பதம் ஆகியவற்றின் தாக்கம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சீனர்களின் கல்லறையில் முட்டைகளடங்கிய பானை வைக்கப்படுவதன்  காரணம் குறித்து பல விவாதங்கள் அவ்வப்போது எழுவதுண்டு. 

பானைக்குள் வைத்த முட்டைகள் உடையாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. 

2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறை ஒன்றிலிருந்து கடந்த மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட பானையில் இருந்த முட்டை ஒன்றின் ஓடு உடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity