காலணி இல்லை என்பதெல்லாம் இந்த இளம் ஓட்டப்பந்தய சாதனையாளருக்கு ஒரு பொருட்டாகவில்லை.
பிரபல நிறுவனங்களின் காலணிகள் இல்லை; நாடாவைக் காலில் ‘ஷூ’ போல சுற்றி அதனையே காலணியாக்கி ஓடி மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளார் 11 வயதான ரீ புல்லோஸ் எனும் பிலிப்பீன்ஸ் நாட்டு மாணவி.
சில நாட்களுக்கு முன்பு இல்லாய்லோ பகுதியில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்ற அவரது குழுவைச் சேர்ந்த 12 பேரில் இருவருக்கு மட்டுமே ‘ஷூ’ இருந்தது.
புல்லோசைப்போலவே காலணி இல்லாத மற்ற மாணவிகளும் நாடாக்களைக் காலில் சுற்றிக்கொண்டுதான் திடல்தடப் போட்டிகளில் பங்கேற்றனர்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்புதான் புல்லோஸ் தன்னுடைய ஓட்டத் திறனை வெளிப்படுத்தினார் என்று அவரது பயிற்சியாளர் பிரிடிரிக் வெலென்ஸுவேலா கூறினார்.
“நாடாவைக் காலில் சுற்றிக்கொண்டு ஓடி மூன்று போட்டிகளில் வெல்வது மிகவும் சிரமமான செயல். ஆனால் அதனைச் செய்து முடித்துள்ளார் புல்லோஸ்,” என்று பெருமிதம் பொங்கக் கூறினார் அவர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity