பிலிப்பீன்ஸ் படுகொலை: சகோதரர்கள் இருவருக்கு 40 ஆண்டு சிறை

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மிகக் கொடூரமான படுகொலை தொடர்பான வழக்கில் செல்வாக்குமிக்க அரசியல்வாதி ஒருவரும் அவரது சகோதரர், அவர்களது அடியாட்கள் ஆகியோர் குற்றவாளிகள் என பிலிப்பீன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அன்டால் அம்பத்துவான் ஜூனியர், அவரது சகோதரர் சால்டி அம்பத்துவான் ஆகியோருக்கு 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நன்னடத்தை காரணமாக அவர்களை விடுவிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்டால், சால்டி ஆகியோரின் சகோதரர் சஜித் இஸ்லாம் அம்பத்துவான் குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இவர்களது தந்தை அன்டால் அம்பத்துவான் சீனியரும் இந்தப் படுகொலை வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவர் 2015ஆம் ஆண்டில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்ததால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

படுகொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால் அம்பத்துவான் சகோதரர்களின் மூன்று உறவினர்களுக்கும் 20 அடியாட்களுக்கும் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு உடந்தையாக இருந்த 15 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குறைந்தது 50 பேர் விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதி தீர்ப்பளித்தபோது படுகொலையில் உயிரிழந்தோரின் வழக்கறிஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

“இந்த தீர்ப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். செய்தியாளர்களைக் கொலை செய்வோர் அல்லது அவர்களுக்கு ஆபத்து விளைவிப்போர் பிலிப்பீன்சில் தண்டனையிலிருந்து தப்ப முடியாது,” என்று முன்னாள் செய்தியாளரான தொடர்புத்துறை செயலாளர் மார்ட்டின் அண்டனார் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டில் நிகழ்ந்த மகுண்டானாவ் படுகொலை பிலிப்பீன்சை உலுக்கியது. போரால் பாதிக்கப்பட்டுள்ள தென்பிலிப்பீன்சில் உள்ள மகுண்டானாவ் மாகாணத்தை ஆட்சி செய்ய இரண்டு குடும்பங்களிடையே கடும் போட்டி நிலவியது.

1986ஆம் ஆண்டிலிருந்து இரும்பு கரம் கொண்டு மகுண்டானாவ் மாகாணத்தை அன்டால் அம்பத்துவான் சீனியரின் குடும்பம் ஆட்சி செய்தது. தங்களுக்கு வேண்டியோரைத் தலைநகர் மணிலாவில் முக்கிய பதவிகளில் அமரவைப்பது மட்டுமின்றி தங்களுக்கு எதிராகச் செயல்படும் அரசியல்வாதிகளையும் வாக்காளர்களையும் அவர்கள் துன்புறுத்தி அடக்கி வைத்திருந்தனர்.

பிலிப்பீன்ஸின் அதிபராக குளோரியா அரோயோ இருந்தபோது, அன்டால் அம்பத்துவான் சீனியரின் அரசியல் பலம் உச்சத்தில் இருந்தது. தமது குடும்பத்துக்கென்றே 2,000க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட ராணுவத்தை அவர் வைத்திருந்தார்.

இந்நிலையில், 2009ஆம் ஆண்டில் ஆளுநர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளுநர் பதவிக்காக அன்டால் அம்பத்துவான் சீனியரை எதிர்த்துப் போட்டியிட திரு எஷ்மாயில் மங்குடாடத்து முன்வந்தார்.
அந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய மாகாணத்தின் தலைநகருக்குத் தமது மனைவி, இரு சகோதரிகள், சில செய்தியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருடன் திரு மங்குடாடத்து கிளம்பினார்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று அம்பத்வான் குடும்பம் தம்மை மிரட்டியிருந்ததால் தலைநகருக்கு அவரால் தனியாகச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

பெண்கள், செய்தியாளர்கள் ஆகியோரை அம்பத்வான் குடும்பத்தினர் தாக்கமாட்டார்கள் என திரு மங்குடாடத்து எண்ணினார். ஆனால் எதிர்பாராத பயங்கர சம்பவம் நிகழ்ந்தது. வேட்புமனுத் தாக்கல் செய்ய திரு மங்குடாடத்து, அவரது மனைவி, இரு சகோதரிகள், செய்தியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் சென்ற கார்களை அன்டால் அம்பத்துவான் ஜூனியரும் அவரது 100 அடியாட்களும் திசை திருப்பினர். இதனால் கார்கள் ஆள் அரவமற்ற மலைப்பகுதியை அடைந்தன.

இதையடுத்து, திரு மங்குடாடத்துவுடன் சென்ற அனைவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். மொத்தம் 58 பேர் மாண்டனர். அவர்களில் செய்தியாளர்கள் 32 பேர். இந்தப் படுகொலை தொடர்பாக மேலும் 80 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

அம்பத்துவான் குடும்பம் மகுன்டானாவில் தொடர்ந்து வலிமைமிக்க அரசியல் குடும்பமாக இருந்து வருகிறது. மே மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அக்குடும்பம் 25 தொகுதிகளைக் கைப்பற்றியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!