கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று பிலிப்பீன்சைத் தாக்கிய புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மையான கத்தோலிக்கர்களைக் கொண்ட பிலிப்பீன்சின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைச் சீர்குலைத்து, நாட்டைப் புரட்டிப்போட்டுவிட்டது 'பான்ஃபோன்' எனும் அந்தப் புயல்.
அந்நாட்டின் மையப் பகுதியான கேபிஸ், லோய்லோ, லெய்டி மாநிலங்களில் நேற்று முன்தினம் புயல் தாக்கியது. இதில் அப்பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்கள், மின்சாரக் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததுடன், நூற்றுக்கான வீடுகளின் கூரைகளும் பிய்த்து எறியப்பட்டு சேதமடைந்தன.
இந்தப் புயலில் 16 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 28ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 12 பேர் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் விடுமுறையைக் கழிக்க வெளியூறுக்குச் சென்ற ஆயிரக்கணக்கானோர், புயலால் பேரழிவு ஏற்பட்ட நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

