சுடச் சுடச் செய்திகள்

‘பன்ஜீ ஜம்ப்’ கோபுரத்திலிருந்து தள்ளிவிட்டு பன்றி சித்திரவதை; ஆத்திரத்தை வெளிப்படுத்திய இணையவாசிகள்

கால்களைக் கயிற்றால் கட்டி, பன்றி ஒன்றை ‘பன்ஜீ ஜம்ப்’ எனும்  சாகச விளையாட்டுக்கான உயரமான கோபுரம் ஒன்றிலிருந்து கீழே தள்ளிவிடப்படும் காணொளி இணையவாசிகள் பலரது கோபத்தைக் கிளறியுள்ளது. சீனாவில் உள்ள கேளிக்கைப் பூங்கா ஒன்றில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அந்த விளையாட்டைப் பிரபலமாக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

விலங்குகளுக்குச் செய்யப்படும் ஆக மோசமான வதை இது என்று ‘பீட்டா’ எனப்படும் விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பின் ஆசிய வட்டார துணைத் தலைவர் ஜேசன் பேக்கர் கூறியுள்ளார்.

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் சோங்சிங் எனும் நகரில் உள்ள மீக்சன் ரெட் ஒயின் டவுன் எனும் அந்த கேளிக்கைப் பூங்காவில் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியானது.

கோபுரத்தின் உச்சிக்கு கால்கள் கட்டப்பட்ட பன்றியை நால்வர் தூக்கிச் செல்லும் காணொளி, படங்களும் வெளியாகின.

பன்றியின் உடலின் மீது ஓர் அங்கி போர்த்தப்பட்டிருந்தது.  அதன் உடல் ‘பன்ஜீ ஜம்ப்’ வடத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது.

பயத்தில் ஒலியெழுப்பிய பன்றியை கோபுரத்தின் முனைக்குக் கொண்டுவந்து கீழே தள்ளுவதும் அந்தப் பன்றி கீழே சென்று  மேலெழும்புவதும் காணொளியில் தெரிந்தது. பயத்துடன் பன்றி எழுப்பிய ஓலம் காற்றில் கரைந்தது.

அந்தக் காணொளி காண்போரை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கியது. இணையவாசிகள் பலரும் இந்தச் செயலை ‘கொடுமை’, ‘மனிதத்தன்மையற்ற செயல்’ என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்ததையடுத்து, தனது இந்தச் செய்கைக்கு அந்த கேளிக்கைப் பூங்கா மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பன்றி ‘நலமாக’ இருந்ததாக அந்த கேளிக்கைப் பூங்கா தெரிவித்தது. ஆனால், இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அது கறிக்காக கொல்லப்படும் இடத்துக்கு அனுப்பப்பட்டதாக சீன இணையச் செய்தி நிறுவனமான ‘தி பேப்பர்’ தெரிவித்தது.

#தமிழ்முரசு #சீனா #கேளிக்கைப்பூங்கா #பன்ஜீ ஜம்ப் #பன்றி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon