வூஹானிலிருந்து வந்த 14 பயணிகளை திருப்பி அனுப்பிய மலேசியா

வூஹானிலிருந்து வந்த 14 பயணிகளை திருப்பி அனுப்பிய மலேசியா

2 mins read
7640b957-61e4-4cc9-91cf-8b4368b6fe4b
மலேசியாவுக்குள் நுழையும் வாயில்களில் உள்ள அதிகாரிகள் சுகாதாரத்தை விட்டுக் கொடுக்காமல் கடுமையான வழிகாட்டி விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

வூஹானிலிருந்து விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்த 14 சுற்றுப் பயணிகள் நாட்டுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டனர் என்று மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் (ஜனவரி 28) மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

"கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வூஹானிலிருந்து வந்த 14 பயணிகள் தரையிறங்கியிருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் நாட்டுக்குள் நுழைய விடாமல் திருப்பியனுப்பப்பட்டனர்," என்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் சொன்னார்.

மலேசியாவுக்குள் நுழையும் வாயில்களில் உள்ள அதிகாரிகள் சுகாதாரத்தை விட்டுக் கொடுக்காமல் கடுமையான வழிகாட்டி விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

கொரோனா கிருமி பரவல் குறித்து பொய்ச் செய்தி பரவுவதைப் பற்றி பேசிய அவர், அச்சத்தை ஏற்படுத்தும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம், ஏற்கெனவே பொய்ச் செய்திகளைப் பரப்பிய எட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. அவை அனைத்து மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றிய சம்பவங்கள் 8க்கு அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட எட்டுப் பேரும் சீன நாட்டவர்களைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

எட்டாவது நபரான 49 வயது பெண், ஜோகூரில் உள்ள பெர்மாய் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில் பொதுமக்கள் முகக் கவசத்தை எப்போதும் அணிய வேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுங்கை புலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவரான டாக்டர் பெனடிக்ட் சிம், உள்ளூரில் மலேசியர்களிடையே இன்னமும் கொரோனா கிருமி பரவாததால் முகக் கவசத்துக்கு அவசியமில்லை என்றார்.

அதே சமயத்தில் முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்றால் அமைச்சு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உள்ளூர் வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சோங் சியங் ஜென் எச்சரித்துள்ளார்.

#வூஹான்மலேசியா #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்