கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மலேசியர்; சிங்கப்பூரில் கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்றதாகத் தகவல்

கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மலேசியர்; சிங்கப்பூரில் கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்றதாகத் தகவல்

2 mins read
110177ce-eeb4-4cef-b4e4-1b67b6731857
HKL (கோலாலம்பூர் மருத்துவமனை)க்கு வரும் பார்வையாளரின் உடல்வெப்பநிலையைப் பரிசோதிக்கும் தாதி. படம்: ராய்ட்டர்ஸ் -

சிலாங்கூரைச் சேர்ந்த 41 வயது மலேசிய ஆடவருக்கு நோவல் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (பிப்ரவரி 4) உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மலேசியர் அவர் என்று கூறப்படுகிறது.

அவருடன் சேர்த்து, மலேசியாவில் இந்த கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் வூஹானிலிருந்து வந்தவர்கள் உட்பட அனைத்துலக நாடுகளின் பேராளர்களுடன் சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூரில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 16 முதல் 23ஆம் தேதி வரை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், 23ஆம் தேதியே மலேசியாவுக்குத் திரும்பிவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மட் குறிப்பிட்டார்.

ஜனவரி 29ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் காய்ச்சல், இருமலுக்காக சிகிச்சை பெற்ற அவர், பிப்ரவரி 2ஆம் தேதி சுங்கை புலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் கொரோனா கிருமித்தொற்று பற்றிய அண்மைய தகவல்களை அளித்த அமைச்சர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் புதிதாக இந்தக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரில் இவரும் ஒருவர்.

மற்றொரு நபர், 63 வயதான சீன நாட்டவர் என்றும் அவர் கடந்த மாதம் 18ஆம் தேதி வூஹானிலிருந்து மலேசியாவுக்குத் திரும்பியது முதல் காய்ச்சல் கண்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், 14 நாட்களுக்கு வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அவருக்கு காய்ச்சல் நீடித்தது. அவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் HKLக்கு (கோலாலம்பூர் மருத்துவமனை) கூடுதல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

#வூஹான் #கொரோனா #

குறிப்புச் சொற்கள்