கொரோனா கிருமித் தொற்று: வூஹானில் பலியான முதல் வெளிநாட்டவர்

கொரோனா கிருமித் தொற்று: வூஹானில் பலியான முதல் வெளிநாட்டவர்

2 mins read
8efff228-5dbe-4394-84fe-5f051302a6ea
பெய்ஜிங்கின் ஹுடோங் வட்டாரத்தில் முகக்கவசம் அணிந்தபடி மருந்தகத்தின் முன்னால் காத்திருக்கும் மக்கள். படம்: இபிஏ -

உலகநாடுகள் பலவற்றைப் பீதியடையச் செய்துள்ள கொரோனா கிருமித் தொற்றால் ஓர் அமெரிக்கர் உயிரிழந்துள்ளார். இவர் கிருமித் தொற்றால் உயிரிந்துள்ள முதல் வெளிநாட்டவர் என்று நம்பப்படுகிறது.

கிருமித்தொற்றின் மையம் என்று கூறப்படும் சீனாவின் வூஹான் பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது அமெரிக்க மாது கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 6) உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஓர் ஜப்பானிய ஆடவரும் வூஹான் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சு நேற்று (பிப்ரவரி 7) தெரிவித்தது.

கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு கொரோனா கிருமித் தொற்று இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் அதை உறுதி செய்ய முடியாத நிலையில் நிமோனியா கிருமிதான் அவர் மரணத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

கிருமித்தொற்று காரணமாக சீனாவில் உயிரிழந்துள்ள முதல் வெளிநாட்டவர்களாக இவ்விருவரும் உள்ளனர்.

இதற்குமுன் பிலிப்பீன்சில் வூஹானைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கிருமித் தொற்றுக்குப் பலியானார். ஹாங்காங்கில் 39 வயதுடைய ஆடவர் ஒருவரும் கிருமித் தொற்றால் மாண்டார்.

இதற்கிடையே சீனாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 19 பேர் வெளிநாட்டவர் என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், அதில் இருவர் குணமடைந்துவிட்டதாகவும் கூறியது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை அமைச்சு வெளியிடவில்லை.

இந்நிலையில், அதிகாரபூர்வ தகவல்களின்படி கொரோனா கிருமித் தொற்றால் குறைந்தது 722 பேர் சீனாவில் உயிரிழந்துள்ளதாகவும் 34,000க்கும் மேற்பட்டோர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்குமுன் 2002 முதல் 2003ஆம் ஆண்டுவரை தலைவிரித்தாடிய 'சார்ஸ்', எட்டு மாதங்களில் 774 உயிர்களை பலிகொண்டது.

ஆனால் இப்போது பதற்றத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா கிருமி, இரண்டே மாதங்களில் 724 உயிர்களை வாங்கிவிட்டது.

இதனால் இப்புதிய கிருமி சற்று வேகமாகவே பரவும் ஆற்றல் உடையதெனக் கூறப்படுகிறது.

#தமிழ்முரசு #கொரோனா #அமெரிக்கர்பலி #ஜப்பானியர்பலி

குறிப்புச் சொற்கள்