கொவிட்-19: பத்து பேர் வீடு திரும்பினர்; மேலும் ஒருவருக்கு கிருமித்தொற்று

கொவிட்-19: பத்து பேர் வீடு திரும்பினர்; மேலும் ஒருவருக்கு கிருமித்தொற்று

2 mins read
f6cc7902-0494-47c7-969b-8f34320d65de
அந்த 24 வயது ஆடவர் அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை. தற்போது இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) கிருமித்தொற்று அறிகுறிகள் முதலில் தென்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

24 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவரைக் கிருமி தொற்றி இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. நேற்று மேலும் பத்துப் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அவர்களுடன் சேர்த்து, பாதிக்கப்பட்ட 86 பேரில் 47 பேர் உடல்நலம் தேறி, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர்.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக இன்று (பிப்ரவரி 21) சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இங்கு மேலும் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆகியுள்ளது.

மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேல், அதாவது 47 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 39 பேரில் பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக உள்ளது; முன்னேற்றம் தென்படுகிறது.

ஆனால், ஐவரின் உடல்நிலை மோசமாக இருப்பதையடுத்து, அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் 24 வயது ஆடவர். 57 வயது பெண்ணான, கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட 82வது நபருடன் தொடர்புடையவர் இவர். அந்தப் பெண்ணுக்கு டெங்கி, கொரோனா ஆகிய இரு கிருமித்தொற்றுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த 24 வயது ஆடவர் அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை. தற்போது இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) கிருமித்தொற்று அறிகுறிகள் முதலில் தென்பட்டன.

கடந்த ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் இரண்டு தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற அவர், அதற்கு அடுத்த நாள் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கிருமித்தொற்று இருப்பது நேற்று (பிப்ரவரி 20) உறுதிசெய்யப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு புக்கிட் பாத்தோக் ஈஸ்டில் வசித்த அவர், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர். ஆனால், அறிகுறிகள் தென்பட்டதிலிருந்து அவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

#சிங்கப்பூர் #கொரோனா #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்