அறிகுறிகளே இல்லாத இளம்பெண்ணிடமிருந்து ஐவருக்கு கிருமித்தொற்று

அறிகுறிகளே இல்லாத இளம்பெண்ணிடமிருந்து ஐவருக்கு கிருமித்தொற்று

2 mins read
8f84a37c-6e1e-41c7-b8fc-37e9e1d499f7
பெய்ஜிங் தெருக்களில் செல்வோர் முகக்கவசங்களுடன் இருப்பதைக் காண முடிகிறது. படம்: ஏஎஃப்பி -

வூஹானிலிருந்து 675 கிமீ. தூரம் பயணம் செய்து உறவினர் வீட்டுக்குச் சென்றபோது 20 வயது சீன இளம்பெண்ணுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதுமில்லை.

ஆனால், அவருடன் நெருங்கிப் பழகிய ஐவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது என சீன அறிவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அறிகுறிகள் ஏதுமில்லாமல்கூட கிருமித்தொற்று இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது என்றனர்.

அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் எனும் சஞ்சிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் கொரோனா கிருமி எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

அறிகுறிகள் ஏதுமில்லாதவர்களிடமிருந்து பரவுவது போன்றவற்றால் இந்தக் கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவில் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,576 என்றும் அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,239 என்றும் கூறப்படுகிறது. சீனாவுக்கு வெளியே 26 நாடுகளில் இந்தக் கிருமி பரவியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வூஹானிலிருந்து அன்யாங்குக்கு சென்ற அந்த இளம்பெண் பல உறவினர்களைச் சந்தித்தார்.

அவரைச் சந்தித்த உறவினர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதும், அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த இளம் பெண்ணுக்கும் பரிசோதிக்கப்பட்டது.

முதலில் அந்தப் பெண்ணுக்கு கிருமித்தொற்று இல்லை என பரிசோதனையில் தெரிந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

அந்த இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்த அந்த உறவினர்களுக்கு நிமோனியா அறிகுறி தென்பட்டது. ஆனாலும், அந்த இளம்பெண்ணுக்கு பிப்ரவரி 11வரை எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அவருக்கு காய்ச்சலோ, சுவாசப் பிரச்சினைகளோ, இருமலோ அல்லது நிமோனியாவோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#சீனா #கொரோனா #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்