சிங்கப்பூரில் கொரோனா தொற்றுடன் சுற்றிய பகுதிகள் பற்றி பொய்த்தகவல் அளித்த தம்பதி

சிங்கப்பூரில் கொரோனா தொற்றுடன் சுற்றிய பகுதிகள் பற்றி பொய்த்தகவல் அளித்த தம்பதி

2 mins read
465e7952-fe30-4cfd-96ae-7d9a06de1908
கொவிட்-19 கிருமி பரவல் தொடங்கிய இடமான சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த ஹு ஜுன், 38, அவரது மனைவி ஷி ஷா, 36, ஆகியோர் சிங்கப்பூரில் வசிக்கிறார்கள். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமி தொற்றியோரை அடையாளம் காணும் பணியைத் தடுக்கும் வகையில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களைக் கொடுத்ததாக சீனாவைச் சேர்ந்த தம்பதியினர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

கொவிட்-19 கிருமி பரவல் தொடங்கிய இடமான சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த ஹு ஜுன், 38, அவரது மனைவி ஷி ஷா, 36, ஆகியோர் சிங்கப்பூரில் வசிக்கிறார்கள்.

ஜனவரி 22ஆம் தேதி சிங்கப்பூர் வந்திறங்கிய ஹுவுக்கு கிருமித்தொற்று இருந்தது ஜனவரி 31ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

அதிலிருந்து குணமடைந்த அவர் இம்மாதம் 19ஆம் தேதி வீடு திரும்பினார். அவரிடம் நெருக்கம் கொண்டவர் என்ற காரணத்தால் அவரது மனைவியை தனிமைப்படுத்துவதற்கான உத்தரவும் இம்மாதம் 1ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

மேலும், ஜனவரி 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அவர்கள் தொடர்கொண்டோரைப் பற்றியும் எங்கெல்லாம் சென்றார்கள் என்ற விவரத்தையும் திரட்டிய அதிகாரிகளிடம் அவ்விருவரும் உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தனிமைப்படுத்தப்பட்டபோது ஷி மற்றொரு பொய்த்தகவலை கொடுத்ததாகக் கூறப்பட்டது.

அதனை அறிந்த அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்திய பின்னரே உண்மைகள் வெளிவரத் தொடங்கின.

தற்போதைய கிருமி பரவல் காலத்தில் தொற்றுநோய் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்படும் முதலாமவர்கள் இவர்கள்.

தம்பதியர் இருவரும் மார்ச் 20ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவிடப்பட்டனர்.

தொற்றுநோய் சட்டத்தின்கீழான குற்றத்திற்கு ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்