சீனாவில் நேற்று (பிப்ரவரி 28) புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 427 என்று அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் இன்று தெரிவித்தது. அதற்கு முந்தைய நாளைவிட 100 அதிகம்.
இதனையடுத்து, அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,251 ஆகியுள்ளது.
கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 47 கூடி மொத்தம் 2,835 ஆக உயர்ந்துள்ளது.
ஹுபெய் மாகாணத்தில் மட்டும் நேற்று 45 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் 37 பேர் வூஹானில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
56 மில்லியன் மக்களக் கொண்ட ஹுபெய் வட்டாரம் தனிமைப்படுத்தப்பட்டது உட்பட, கடந்த ஒரு மாத காலமாக சீனாவில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு அங்கு புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது சில இடங்களில் மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
ஆனால், நேற்று புதிதாக ஆறு நாடுகள், நான்கு கண்டங்களில் கொரோனா கிருமித்தொற்று பரவல் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, கொரோனா தனது கரங்களை உலக அளவில் பெருமளவு விரித்து வருவது புலனாகிறது.
அவற்றில் தென்கொரியா மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அங்கு இன்று 813 பேர் புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,150 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650லிருந்து 888 (நேற்றைய நிலவரம்) ஆக உயர்ந்துள்ளாது. அவர்களில் 21 பேர் உயிரிழந்ததாகவும் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.
அதேபோல ஈரானிலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 58 விழுக்காடு அதிகரித்து 388 ஆகி இருப்பதாகவும் அதனால் பலியானோர் எண்ணிக்கை 30 விழுக்காடு உயர்ந்து 34 ஆகியிருப்பதாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், பிபிசி பெர்சியா அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210 என்று தனது செய்தியில் குறிப்பிட்டது உண்மையான தகவல் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த கிருமித்தொற்று உலக அளவில் பரவுவது, அதன் தாக்கம் ஆகியவை தற்போது 'ஆக உயர்ந்த' எச்சரிக்கை நிலையை எட்டியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
#சீனா #ஈரான் #இத்தாலி #கொரோனா #தென்கொரியா

