கொவிட்-19: சிங்கப்பூரில் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்தது

கொவிட்-19: சிங்கப்பூரில் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்தது

2 mins read
119f6336-87c4-4f6d-924f-9a4ced838c40
எண் 10 சைன்ஸ் பார்க் ரோட்டில் அமைந்துள்ள 'விஸ்லேர்ன் டெக்னாலஜிஸ்' என்னும் இணையக்கற்றல் நிறுவனத்தில் கிருமித்தொற்று கண்ட வட்டாரத்துடன் தொடர்புடைய மேலும் நால்வருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டிருப்பது இன்று (பிப்ரவரி 29) உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் நால்வரும் 'விஸ்லேர்ன் டெக்னாலஜிஸ்' என்னும் இணையக்கற்றல் நிறுவனத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட கொரோனா கிருமித்தொற்று வட்டாரத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டது.

முற்றிலும் குணமடைந்து மேலும் மூவர் வீடு திரும்பியதாகவும், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 72 ஆகியிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

கிருமித்தொற்று கண்ட 99வது நபர் 27 வயதான சிங்கப்பூர் ஆடவர். அவர் அண்மையில் சீனா, கிருமித்தொற்று பாதிப்பு கண்ட தென்கொரியாவின் பகுதிகள் போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கவில்லை. அவர் தற்போது தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

இம்மாதம் 21ஆம் தேதி அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. 25, 28 தேதிகளில் அவர் மருந்தகங்களில் சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர் பெரும்பாலும் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81ல் இருக்கும் தமது வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்பட்டது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 100வது நபர் 20 வயது மலேசிய ஆடவர். அவர் அண்மையில் சீனா, கிருமித்தொற்று பாதிப்பு கண்ட தென்கொரியாவின் பகுதிகள் போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கவில்லை. அவர் தற்போது தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

அவருக்கு 27ஆம் தேதி கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. அவர் கிருமி தொற்றிய 93வது நபருடன் தொடர்புடையவர் என்பதால் உடனடியாக தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர் பெரும்பாலும் ஹாலண்ட் அவென்யூவில் இருக்கும் தமது வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்பட்டது.

கிருமித்தொற்று கண்ட 101வது நபர் 61 வயதான சிங்கப்பூர் ஆடவர். அவர் அண்மையில் சீனா, கிருமித்தொற்று பாதிப்பு கண்ட தென்கொரியாவின் பகுதிகள் போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கவில்லை. அவருக்கு கிருமித்தொற்று இருப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்போது இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் இருக்கிறார். அவர் கிருமித்தொற்று கண்ட 93வது நபருடன் தொடர்புடையவர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 102வது நபர் 41 வயது பிலிப்பீன்ஸ் நாட்டுப் பெண். அவர் அண்மையில் சீனா, கிருமித்தொற்று பாதிப்பு கண்ட தென்கொரியாவின் பகுதிகள் போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கவில்லை. கிருமித்தொற்று கண்ட 101வது நபரின் இல்லப் பணிப்பெண் அவர். அவருக்கு கிருமித்தொற்று இருப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்போது இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் இருக்கிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 30 பேரில் பெரும்பாலானோர் உடல்நிலை சீராகவோ மேம்பட்டோ உள்ள நிலையில் 7 பேரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

கிருமித்தொற்று கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விவரம் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர் #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்