கொவிட்-19: போலி செய்திகளுக்கு எதிரான போரில் தூதுவர்களாக வெளிநாட்டு ஊழியர்கள்

3 mins read
5e23843c-46db-452e-a32f-8fe9732cbdc1
துவாசில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர் தூதுவர்களான, பங்ளாதேஷ் ஊழியர் ஷைஃபிகுல் இஸ்லாம் (இடது), இந்திய ஊழியர் கே. தெய்வசிகாமணி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்றுக்காக சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை, கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்கள் எனத் தவறாக நினைத்துக்கொண்டு பதற்றப்படுவோர் சிலர்; சிங்கப்பூர் பயணிகளுக்கு தாயகம் திரும்ப பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் அச்சத்தில் அவசரகதியில் வேலையை விட்டுவிடுவோர் சிலர்.

- சிங்கப்பூரில் பணி புரியும் வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் எதிர்நோக்கும் இதுபோன்ற போலிச் செய்திப் பரவலா ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்பியது வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் (MWC).

இந்தப் பணிக்கு உதவ, தங்களது தொண்டூழியர்களாகப் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் உதவியையே நாடியுள்ளது MWC. துல்லியமான தகவல்களை சரியான நேரத்தில் மற்ற ஊழியர்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபடுகின்றர் அவர்கள்.

கடந்த மாதம் 39 வயதான பங்ளாதேஷ் ஊழியருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பல பங்ளாதேஷ் ஊழியர்கள் தன்னைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடனடியாக தாயகம் திரும்ப விரும்புவதாகக் கூறியதை நினைவுகூர்ந்தார் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் மேனன்.

வெளிநாட்டு ஊழியர்களுடன் தளத்தில் மிகவும் நெருக்கமாக இருந்து அவ்வப்போது சரியான தகவல்களைத் தெரிவிக்க உகந்த ஆட்கள் தேவைப்பட்டனர்.

நிலையத்தின் முதன்மைக் குழுவில் இருப்பவர்கள் 25 பேர் மட்டுமே; ஆனால், சுமார் 125,000 வெளிநாட்டு ஊழியர்களுடன் தொடர்புகொண்டு உண்மையான நிலவரத்தை விளக்க இந்த 25 பேர் மட்டும் போதாது.

ஆனால், 5,000 வெளிநாட்டு ஊழியர் தூதுவர்களைக் கொண்டுள்ளது நிலையம். அவர்களின் உதவியுடன் கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் போலி செய்தியால் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள முடிவெடுத்தது நிலையம்.

தமிழகத்திலிருந்து இங்கு வந்து பணிபுரியும் திரு கே. தெய்வசிகாமணி அத்தகைய தூதுவர்களில் ஒருவர். சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாகப் பணிபுரியும் அவர், தற்போது துவாஸ் பகுதியில் உள்ள நிலமீட்புத் தளத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக நிலையத்தின் தூதுவராக இருக்கிறார் திரு தெய்வசிகாமணி.

தம்முடன் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தாம் தொண்டூழியராக இருக்கும் ஓர் ஆலயத்திற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் போன்ற நூற்றுக்கணக்கானோருக்கு, அரசாங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் துல்லியமான தகவல்களை வாட்ஸ்அப் மூலம் குறுந்தகவல்களாக அனுப்பி வருகிறார்.

பதற்றப்படத் தேவையில்லை என்று அவர்களுக்கு சமாதானம் கூறுவதுடன், உண்மை நிலவரம் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். மேலும், கைகளை அடிக்கடி சவர்க்காரம் கொண்டு கழுவுமாறு அவர்களை அறிவுறுத்துகிறார்.

அதேபோல, ஊழியர்களிடையே நிலவும் அச்சம், சந்தேகம் போன்றவற்றைப் பற்றியும் தமது மேற்பார்வையாளர் மூலம் நிலையத்துக்குத் தெரியப்படுத்துகிறார், இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனான அவர்.

அதேபோன்ற சேவையை வழங்கி வருகிறார் பங்ளாதேஷைச் சேர்ந்த திரு ஷைஃபிகுல் இஸ்லாம். டாக்காவிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் 31 வயது ஆடவர், கடல்துறை நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருக்கிறார்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்ட 42வது நபரான பங்ளாதேஷ் ஊழியரைப் பற்றிய அறிவிப்பு வெளியானதும் பல பங்ளாதேஷ் ஊழியர்கள் பெருங்குழப்பம் அடைந்ததாகக் கூறினார் ஷைஃபிகுல், அவர்களுடன் பேசி உண்மை நிலவரத்தைப் புரியவைத்தார்.

எந்த நேரத்திலும் மருத்துவமனைக்குச் செல்லலாம், அரசாங்கம் உங்களை கவனித்துக்கொள்ளும் என்பது போன்ற தகவல்களை அவர்களுக்கு எடுத்துக் கூறி சமாதானப்படுத்தினார்.

அதேபோல திரு மேனனும் நிலையத்தில் காலை வேளைகளிலும் வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளிலும் ஊழியர்களை சந்தித்து அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். ஊழியர்களுக்குப் புரிய வேண்டும் என்பதால் அவர்களது தாய்மொழியிலேயே விளக்கம் அளிக்க தொண்டூழியர்கள் உதவி வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் ஊழியரணியில் மூன்றில் ஒரு பங்கினர் என்றும் சிங்கப்பூர் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் என்றும் குறிப்பிட்ட திரு மேனன், வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாத்தால்தான் சிங்கப்பூரர்களை முழுமையாகப் பாதுகாக்க முடியும் என்று கூறினார்.

#கொவிட்-19 #சிங்கப்பூர் #வெளிநாட்டு ஊழியர்கள் #MWC

குறிப்புச் சொற்கள்