'அறிகுறிகளுடன் சிங்கப்பூருக்குள் வருவோர் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க ஆணை'

'அறிகுறிகளுடன் சிங்கப்பூருக்குள் வருவோர் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க ஆணை'

2 mins read
ebfcf76d-1138-4f49-a0a7-db558073184e
நாசி திரவத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இல்லை என்று காட்டினாலும் அவர்கள் 2 வாரங்களுக்கு எல்லா நேரத்திலும் வீட்டிலேயே இருக்க வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வரும்போது காய்ச்சல், சுவாசப் பிரச்சினை போன்றவை இருந்தால் அவர்கள் 14 நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான ஆணை வழங்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் இன்று (மார்ச் 13) கூறியுள்ளார்.

அவர்களது நாசி திரவத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இல்லை என்று காட்டினாலும் அவர்கள் 2 வாரங்களுக்கு எல்லா நேரத்திலும் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

அண்மைக்காலமாக, அனைத்துலக அளவில் கொவிட்-19 படுவேகமாக வளர்வதாலும் சிங்கப்பூரில் இறக்குமதியான கொவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று அறிகுறிகளுடன் சிங்கப்பூருக்குள் வருவோருக்கு சோதனைச்சாவடிகளில் நாசி திரவச் சோதனை இம்மாதம் 4ஆம் தேதி முதல் செய்யப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுப் பயணிகள் அந்தக் காலகடத்தை ஹோட்டல்களில் கழிக்க வேண்டியிருக்கும்.

கிருமித்தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுபவர் மேற்கொண்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

கொரோனா கிருமித்தொற்றைக் கையாளும் அமைச்சர்நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான திரு வோங், "நாசி திரவத்தைக்கொண்டு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தாவிட்டாலும், அந்த நபருக்கு கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிபடக் கூற அது மட்டும் போதாது. கிருமித்தொற்று அடைவு காலமாக அது இருக்கலாம். அதற்குப் பிறகு அவருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம்," என்றார்.

எந்த நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு சிங்கப்பூரில் கொவிட்-19 சம்பவங்கள் இறக்குமதியாகியுள்ளனவோ அந்த நாடுகளிலிருந்து வருவோரிடம் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் இது மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா தொடர்பான எல்லைக் கட்டுப்பாடு சூழ்நிலைக்கேற்பமாறும் என்று கூறி திரு வோங், இறக்குமதியாகும் கொரோனா சம்பவங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்