வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்குள் வரும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், அனைத்துலக வருகைக்கான கட்டுப்பாடுகளை சீனா கடுமையாக்கியுள்ளது. இன்று மட்டும் அத்தகைய 12 சம்பவங்கள் பதிவாகின.
சீனாவில் தொடங்கிய கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அதில் வெற்றி பெற்றிருந்தாலும் தற்போது வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வரும் பயணிகளால் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்துவிடுமோ என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து சீனாவுக்கு வருவோர் இன்று (மார்ச் 16) முதல் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று பெய்ஜிங் நகர அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்குமுன், சீனாவுக்கு வருவோர் தங்கள் வீடுகளில் 14 நாட்களுக்குக் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது சிறப்பு காரணங்களுக்காக வருவோருக்கு மட்டும் இந்த உத்தரவிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். மற்றவர்கள், தனிமைப்படுத்தும் இடங்களில் தங்கியிருக்க வேண்டும். அதற்கான செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பெய்ஜிங் உத்தரவிட்டது.
கொரோனா கிருமிக்கு சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,200ஐ கடந்துவிட்டது.


