உலக நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா கிருமி, உலக வல்லரசு என்று அமெரிக்காவை விட்டுவிடவில்லை. அந்நாட்டில் ஐம்பது மாநிலங்களுக்கும் கிருமி பரவி யுள்ளது.
வெஸ்ட் வெர்ஜினியா மாநிலத்தில் முதல் முறையாக ஒருவர் கிருமித் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். முதல் கிருமித் தொற்றுச் சம்பவத்தை அறிவித்த அம்மாநில ஆளுநர் ஜிம் ஜஸ்டிஸ், எங்கள் மாநிலத்துக்கும் கிருமி வரும் என்பதை தெரிந்து வைத்திருந்தோம் என்றார்.
இந்த நிலையில் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள பே ஏரியா முடக்கப்பட்டதைப் போல நியூயார்க் நகரையும் முடக்குவது பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
அமெரிக்கா முழுவதும் இதுவரை கிருமித் தொற்றுக்கு 108 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் 6,300க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் டிரம்ப் நிர்வாகம், ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பில் பொருளியலைத் தூண்டும் தொகுப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளது.
மேலும் கொரோனா கிருமி பரவல் விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக செயல்படத் தவறினால் வேலை இழப்பு 20 விழுக்காட்டையும் தாண்டும் என்று குடியரசுக்கட்சி செனட்டர்களை நிதியமைச்சர் ஸ்டீவன் மினுச்சின் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, கொரோனா கிருமி பரவல் கொள்ளை நோயாக உருமாறும் என்பது தமக்கு முன்னரே தெரியும் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
"கொள்ளை நோய் என அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அது கொள்ளை நோயாக பரவும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்தேன்," என்று அவர் சொன்னார்.
செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கொரோனா கிருமிக்கு எதிராக தமது குழு எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டி பேசினார்.
ஆனால் செய்தி ஊடகங்களுடனான உறவை தமது குழு தவறாக நிர்வகித்துவிட்டதாக அவர் கூறினார்.
#அமெரிக்கா #கொரோனா

