'வேலை அனுமதிச் சீட்டுடைய மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வரும் முன் அனுமதி பெற வேண்டும்'

'வேலை அனுமதிச் சீட்டுடைய மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வரும் முன் அனுமதி பெற வேண்டும்'

2 mins read
0a9a57bd-b25b-42db-960d-13c0cf840ccf
வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வர பயணத்தைத் தொடங்கும் முன்பு மனிதவள அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும். கோப்புப்படம் : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வர பயணத்தைத் தொடங்கும் முன்பு மனிதவள அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அமைச்சு இன்று (மார்ச் 25) தெரிவித்துள்ளது. அனுமதி கோரும் நிறுவனங்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தற்போது சிங்கப்பூரின் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருந்து சிங்கப்பூருக்கு வெளியில் இருப்போருக்கும், வேலை அனுமதிச் சீட்டு அங்கீகரிக்கப்பட்டு இன்னும் சிங்கப்பூருக்குள் வராதவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று கூறப்பட்டது.

நுழைவு அனுமதி பெறும் நடைமுறை உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து தடங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சு கூறியது.

ஆயினும், உணவு விநியோகிக்கும் லாரிகளின் ஓட்டுநர்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகளில் இருப்போருக்கு மனிதவள அமைச்சின் நுழைவு அனுமதி, வீட்டிலேயே தங்கியிருக்கும் ஆணை ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த ஊழியர்களைத் தவிர, வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் மற்ற ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வந்த பிறகு 14 நாட்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும்.

தங்கள் ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் வருவதற்காக அனுமதி கோரும் நிறுவனங்கள், அவர்கள் இங்கு வந்து 14 நாட்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பது பற்றிய தகவல்களை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.

மனிதவள அமைச்சிடமிருந்து அனுமதி பெறுவதற்கு முன்பு இங்கு வருவதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாமென ஊழியர்களுக்குத் தெரிவிக்குமாறு மனிதவள அமைச்சு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் மலேசியர்கள் விமான நிலைய ஊழியர்களிடமும் சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளிலும் அந்த நுழைவு அனுமதியைக் காட்ட வேண்டும்.

#சிங்கப்பூர் #மலேசியா#வெளிநாட்டு ஊழியர் #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்