நிபுணரின் அறிவுரை: ஐந்து நாள் மருத்துவ விடுப்பா? மூத்தோரை விட்டு விலகி இருங்கள்

நிபுணரின் அறிவுரை: ஐந்து நாள் மருத்துவ விடுப்பா? மூத்தோரை விட்டு விலகி இருங்கள்

2 mins read
2a8cc63d-d1da-466c-9060-21308aa704ff
ஐந்து நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டவர்கள் எந்தவொரு நேரத்திலும் அவர்களின் குடும்பத்தில் உள்ள மூத்தோரை நெருங்கக்கூடாது என்று தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் லியோ யீ சின் வலியுறுத்தி உள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஐந்து நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டவர்கள் எந்தவொரு நேரத்திலும் அவர்களின் குடும்பத்தில் உள்ள மூத்தோரை நெருங்கக்கூடாது என்று தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் லியோ யீ சின் வலியுறுத்தி உள்ளார்.

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு மூத்த குடிமக்களே பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் அவர்.

கடினமான மூச்சுத்திணறல் அறிகுறி காணப்படுவோருக்கு ஐந்து நாள் மருத்துவ விடுப்பு அளிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில்தானே இருக்கிறோம் என்று கருதி மூத்தோருடன் இணைந்து சாப்பிடுவதைக்கூட அவர்கள் தவிர்க்க வேண்டும் என பேராசிரியர் லியோ நேற்று தெரிவித்தார்.

"வீட்டில் உள்ள மற்றவர்களுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் அவ்வாறு மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டோர் அறுவைசிகிச்சையின்போது அணியும் ரக முகக்கவசத்தை அணிந்துகொண்டிருக்க வேண்டும்.

"மேலும் தங்களது சொந்த உடல் சுகாதாரத்தில் அவர்களின் கவனம் இருக்க வேண்டும். சோப்புப் போட்டு கைகளைக் கழுவுவதோடு சுத்திகரிப்பு திரவத்தையும் பயன்படுத்த வேண்டும்.

"அவர்கள் தங்களது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கான கழிவறையைத் தவிர்த்துவிட்டு தனிப்பட்ட கழிவறையை அவர்கள் பயன்படுத்த வேண்டும்.

"ஒருவேளை அதற்கு சாத்தியமில்லை எனில் அவர்கள் பயன்படுத்தும் கழிவறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொவிட்-19 கிருமிக்குக் காரணமான சார்ஸ்-கொவி-2 பற்றி நாம் தெரிந்துவைத்திருப்பதால் இதுபோன்ற செயல்களைக் கடைப்பிடித்தல் அவசியம்.

"நாசி திரவம் தெறிப்பதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிருமி பரவக்கூடும். அதாவது, கிருமி தொற்றிய ஒருவருடன் ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் வரையிலான தூர இடைவெளியில் நேருக்கு நேர் சந்திப்பதன் மூலும் அசுத்தமான சுற்றுப்புறம் அல்லது அசுத்தமான பொருட்கள் வாயிலாக கிருமி பரவக்கூடும்," என்று கூறினார் திருவாட்டி லியோ.

மேலும் மூச்சுத்திணறல் ஏற்படுவதன் காரணங்களையும் அவர் விளக்கினார். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்குச்சளி போன்றவற்றால் கடுமையான மூச்சுத் திணறலுக்கு ஆளானால் முகக் கவசத்தை அணிந்துகொண்டு சீக்கிரமே மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றார் அவர்.

#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்