சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் தொடர்ச்சியாக 6வது நாளாக புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லை

1 mins read
87403907-9c1c-4a1a-9a90-65f4954261be
சீனாவின் வூஹான் நகரில் ரயிலில் செல்லும் பயணிகள் முகக்கவசங்களை அணிந்துள்ளனர். படம்: இபிஏ -

சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று (மார்ச் 29) உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது. முந்தைய நாள் பதிவான 45 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு.

கிருமித்தொற்று பாதிப்பால் மேலும் நால்வர் உயிரிழந்ததாக ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. அவர்களையும் சேர்த்து, சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று நிலவரப்படி 3,304ஆக பதிவானது.

அந்நாட்டில் கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 81,470ஆக உயர்ந்தது.

கொரோனா கிருமித்தொற்று தொடங்கிய ஹுபெய் மாநிலத்தில் நேற்று தொடர்ச்சியாக ஆறாவது நாளாக புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை.

அறுபது மில்லியன் பேர் மக்கள்தொகையைக் கொண்ட ஹுபெய் மாநிலத்தில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சீனாவின் மற்ற பகுதிகளுக்கு உள்நாட்டு விமானச் சேவைகள் தொடர்ந்தன.

எனினும், ஹுபெயிலிருந்து சீனாவின் வடமேற்கு மாநிலமான கான்சுவுக்கு பயணம் செய்த நபர் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள போதிலும், வெளிநாடுகளில் கிருமித்தொற்றுக்கு ஆளாகி சீனா வருபவர்களால் மீண்டும் மற்றொரு கிருமித்தொற்று அலை எழும் அபாயம் குறித்து பெய்ஜிங் கவலை அடைந்துள்ளது.

நாட்டில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாட்டினர் சீனாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு வரும் அனைத்துலக விமானச் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்