உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை: அபாயம் நீங்கிவிடவில்லை; நீண்டகாலத்துக்கு போராட்டம் தொடரும்

உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை: அபாயம் நீங்கிவிடவில்லை; நீண்டகாலத்துக்கு போராட்டம் தொடரும்

2 mins read
86a2ed44-af62-4e89-ab74-459cac506220
சிங்கப்பூரில் இப்போது கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை உலக சுகாதார நிறுவனத்துக்கான தொழில்நுட்ப ஆலோசகரான டாக்டர் மேத்யூ கிரிஃபிஃப்த் சுட்டிக் காட்டினார். படம்: ராய்ட்டர்ஸ் -

கொரோனா கிருமிக்கு எதிரான நீண்டகாலப் போரை உலகம் எதிர்கொண்டுள்ள வேளையில், கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற நாடுகளும், கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டுவிடக்கூடாது என்று உலக சுகாதார நிறுஅனம் இன்று (மார்ச் 31) எச்சரித்துள்ளது.

"உலகம் இதற்கு முன்பு கண்டிராத கொள்ளைநோய் இது. நமது வாழ்க்கை முறையை மாற்றி மக்களைப் பெரும் துயரத்துக்கு ஆளாக்கி இருக்கிறது. இந்தக் கொள்ளைநோயிலிருந்து மீள வெகு காலம் ஆகும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்," என்று உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிஃபிக் வட்டார இயக்குநர் டாக்டர் டகேஷி காசாய் செய்தியாளர்களிடம் கூறினார்.

"இது ஒரு நீண்டகாலப் போராட்டமாக இருக்கும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர், தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டிருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவை நிறுத்திவிடக்கூடாது என்றார் அவர்.

சிங்கப்பூரில் இப்போது கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை உலக சுகாதார நிறுவனத்துக்கான தொழில்நுட்ப ஆலோசகரான டாக்டர் மேத்யூ கிரிஃபிஃப்த் சுட்டிக் காட்டினார்.

அவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தொடர்பிலானது என்று கூறிய அவர், அதுவும் அக்கறைக்குரியதே என்றார்.

புதிய இடங்களிலும் கிருமிப் பரவல் தென்படுகிறது என்று கூறிய அவர், சிறிய பசிபிக் நாடுகளில் சுகாதாரக் கட்டமைப்புகள் வலுவாக இல்லாத நிலையில் அவை எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்றார்.

ஃபிஜி போன்ற நாடுகளில் கொரோனா கிருமித்தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனைக்கே மாதிரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய சூழல். மேலும், உலகளாவிய பயணத்தடை மேலும் அதனைச் சிக்கலாக்குகிறது என்றார் டாக்டர் மேத்யூ.

மொத்தமாகப் பரிசோதிப்பது, குழுமங்களை குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்படுத்துவது, ஆரம்பகால சிகிச்சைகள், பாதுகாப்பான இடைவெளி, முடக்கம் போன்ற நடவடிக்கைகள், "பெரியளவிலான சமூகப் பரவலுக்கு தயாராவதற்கான மதிப்புமிக்க நேரத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்," என்று டாக்டர் டகேஷி கூறினார்.

இந்த அனைத்து விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அபாயம் நீங்கிவிடவில்லை என்பதையும் நோய்ப் பரவல் தொடர்கிறது என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

உலக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800,000ஐ நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#WHO #கொவிட்-19 #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்